சென்னை:
மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பிருந்தா காலமானார். அவரது மறைவுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்ககம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல்செய்தி வருமாறு:
மாதர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பிருந்தாவின் மறைவுச் செய்திஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.சென்னையில் பிறந்த தோழர் பிருந்தா இஎஸ்ஐ ஊழியராக சென்னையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இஎஸ்ஐ ஊழியர் சங்க நிர்வாகியாக, உழைக்கும் பெண்கள்ஒருங்கிணைப்புக்குழுவின் இணை கன்வீனராக, ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொருளாளராக இருந்து செயல்பட்டவர். தன் அலுவலக பணி நேரம் போக மற்றநேரங்களில் முழுமையாக மாதர் சங்க அலுவலகப் பணிகளை ஈடுபாட்டுடன் செய்தவர்.மகளிர் சிந்தனை மாத இதழில் பொறுப்பா சிரியராக இருந்து அதை சிறப்பாக கொண்டு சென்றவர்.மகளிர் சிந்தனை, மாநாட்டு அறிக்கைகள், சிறப்பு மலர்கள் இவற்றை வடிவமைப்ப தில் கைதேர்ந்தவர். எத்தகைய சிரமமான பணிகளை செய்தாலும் அதில் தன்னை முன்னிறுத்த விரும்பாதவர்.
இவர் ஒரு சிறந்த நாடகக்கலைஞர். சென்னையில் மாதர் சங்கம் உருவாக்கிய சக்தி கலை குழுவில் சிறந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் நடத்திய சென்னை கலை குழுவில் ‘பெண்’, ‘சும்மா’ போன்ற நாடகங்களை சிறப்பாக நடித்து பெண்ணுரிமை கருத்துக்களை நாடக மேடைகள் மூலமாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். அரசின் சினிமா தணிக்கைக்குழுவில் இரண்டுமுறை இருந்து செயல்பட்டவர்.தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் திறமை பெற்றவர் .சிறந்த மொழி பெயர்ப்பாளர். அவரது மொழிபெயர்ப்புகள் மாதர் சங்கத்திற்கு மிகப்பெரிய பொக்கிஷம்.
1979-ல் இந்தோ- ஸ்வீடன் நிறுவனம் ஒன்று நடத்திய வேளாண் உறவுகள் குறித்த ஆய்வு ஒன்றில் கலந்து கொண்ட போது, தன்னுடன் களப்பணியாற்றிய முனைவர் இராஜகோபாலை காதலித்து, மைதிலி- மைதிலிசிவராமன் தலைமையில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டவர்.இவர்களுக்கு அனிதா என்ற ஒரு மகள் இருக்கிறார். மத்தியதர வர்க்கத்தில் பிறந்து மத்தியதர ஊழியராக இருந்த போதும் எளிமையாக இருந்து எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட போதும் மனம் தளராமல் தைரியத்துடன் அதை ஏற்றுக்கொண்டு மீண்டு வந்தவர்.சகோதரி பிருந்தா அவர்களின் செயல்பாடுகளை, தியாகத்தை, அர்ப்பணிப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை. சகோதரி பிருந்தா அவர்களின் இழப்பு ஜனநாயக மாதர் சங்கத்திற்கும் ,அவரது குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது இடத்தை இட்டு நிரப்ப இனி யார் வருவார் என ஏக்கத்துடன் அவருக்கு இதய அஞ்சலியையும்,அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு செலுத்துகிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.