tamilnadu

img

திருமண உதவித் திட்டத்தில் புதிய நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்திடுக.... தமிழக அரசுக்கு ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்...

சென்னை:
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமணஉதவித் திட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் பி்.சுகந்தி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:

1989இல் பெண்கள் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக திரு.கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்டது தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம். இத்திட்டம் கொண்டுவந்த பின் தான்கிராமப்புற, நகர்ப்புற ஏழை, எளிய குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளை எப்படியாவது குறைந்தது பத்தாம் வகுப்பு வரையாவது படிக்க வைக்க பெற்றோர்கள் முன்  வந்தனர். இத்திட்டம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு பெரிய அளவில் உதவிகரமாக இருந்து வருகிறது. இதில் பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தால்  25000 ரூபாயும் 8 கிராம் தங்க நாணயமும், பட்டப்படிப்பு படித்திருந்தால் அவர்களுக்கு 50000 ரூபாய்  நிதி உதவியும் 8 கிராம்தங்க நாணயமும் வழங்கப்பட்டு வருகிறது.  இத்திருமண திட்டத்தில் பயன்பெற கல்வித்தகுதி, வருமானச் சான்று, திருமண அழைப்பிதழ், வயதுவரம்புக்கான சான்று,  குடும்ப அட்டை நகல், புகைப்படம் போன்றவை மட்டுமே போதும் என்ற நிலை இருந்தது.

ஆனால் தற்போது தமிழக அரசு  இத்திருமண உதவித் திட்டத்தில் ஏற்கனவே இருந்த தை விட பல புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.  இத்திட்டத்தில் பயன் பெறக்கூடிய பயனாளிகள் உரிய சான்றிதழ் பெறுவதற்கு  கால தாமதம்ஏற்படாமல் அரசு அதிகாரிகள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் காலம் கடத்தாமல்உரிய ஆய்வுகள் மேற்கொண்டு பயனாளி களுக்கு உரிய நேரத்தில் பலன் கிடைத்திடவும் வகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
ஆனால் அரசு கூறியிருக்கும் புதிய விதிமுறையில் மாடி வீடு வைத்திருப்பவர்கள், நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், திருமண மண்டபத்தில் திருமணம் செய்பவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது என புதிய விதிமுறைகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் பல  எளிய குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு  திருமண உதவித்தொகை பெற முடியாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏராளமான குடும்பங்கள் தமிழகத்தில் இன்றைக்கும் வாடகை வீடுகளிலும் அரசு புறம்போக்கு மற்றும் சாலை ஓரங்களிலும்  வாழ்கின்றனர். . இத்தகைய குடும்பங்களில் தங்கள் வீடுகளில் வைத்து திருமணம் நடத்த இயலாது அவரவர் வசதிக்கு ஏற்ப சிறிய திருமண மண்டபங்களில் வாடகை கொடுத்து நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.பல குடும்பங்கள் வீட்டு வாடகைத் தொகையை மாத தவணையாக கட்டி  கடன் பெற்று வீடுகளை கட்டுகின்றனர். மேலும் நான்கு சக்கரவாகனம் தவணைக்கு வாங்கிவாடகைக்கு விடும் தொழில் செய்பவர்களும், இந்த வரையறைக்குள் வருகின்றனர். இவை திருமண உதவித் தொகையை பெறுவதற்கு தடையான காரணங்களாக அரசு கொண்டு வந்துள்ளதால் ஏராளமான  குடும்பங்கள் இந்த உதவித்தொகையை பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.தமிழக அரசு அறிவித்துள்ள  நகர பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், பிரசவகால விடுப்பு அதிகரிப்பு, ரேஷன் கார்டுகள் உடனடியாக கிடைப்பதற்கு   வகை செய்வது போன்ற அறிவிப்புகள்   சிறப்பாக  பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுஉள்ளது. ஆனால் திருமண உதவித்திட்டத்தில் தமிழக அரசு புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பெண் கல்வியை ஊக்கப்படுத்த கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தின் நோக்கம் இதனால் கேள்விக்குறியாகிறது என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.  எனவே புதியதாக கொண்டு வந்துள்ள விதிமுறைகளை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.