சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிறையில் தந்தை,மகன் உயிரிழந்துள்ள சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இச்சம்பவத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக கூறியுள்ளதாவது:சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் அவரது மகன் பென் னிக்ஸ் இருவரையும் கடந்த 19 ஆம் தேதி காவல்துறையினர் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
22 ஆம் தேதி நெஞ்சுவலியால் மயங்கி விழுந்தார் என்று கோவில்பட்டி மருத்துவமனையில் மகன் பென்னிக்ஸ் சேர்க்கப்பட்ட போதே அவர் இறந்திருக்கிறார். பிறகு தந்தை ஜெயராஜூம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரும் இறந்துவிட்டார்.காவலர்களால் மிகக்கடுமையாகத் தாக் கப்பட்டதால் தான் மரணம் அடைந்தார்கள் என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார். கொரோனா பேரழிவை உருவாக்கி வரும் நெருக்கடியில் வாய்த்தகராறு காரணமாக, தந்தை-மகன் என இரண்டு உயிர்களை பறிக்கும் அளவுக்கு காவல் துறை நடந்து கொள்கிறது என்றால், இது திரைமறைவு போலீஸ் ஆட்சியா?
உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதிலளிக்க வேண்டும். மரணத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்! எப்போது கிடைக் கும் தீர்வு?இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
விசாரணை தேவை: வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,” சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்டவர்களை ரிமாண்ட் செய்து, தூத்துக்குடி கிளைச் சிறையிலோ அல்லது பாளையங்கோட்டை மத்திய சிறையிலோ அடைக்காமல், வெகு தூரத்தில் உள்ள கோவில்பட்டி கிளைச் சிறைக்குக் கொண்டு சென்றதிலிருந்தே காவல்துறையினரின் குற்றச் செயல் உறுதியாகிறது.காவல்துறையினரின் இந்த அப்பட்டமான படுகொலைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை பணி நீக்கம் செய்வதோடு, கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.
காவல்துறையினரின் இதுபோன்ற கொடிய தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.இருவரது உடல்களையும் வெவ்வேறு மருத்துவமனைகளில் நிபுணத்துவம் பெற்ற மூன்று மருத்துவர்கள் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும்.இச்சம்பவம் குறித்து உண்மை நிலையை வெளிக்கொணர, பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண் டுள்ளார்.