ஆன்லைனில் 11 பேரிடம் ரூ.4.82 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
புதுச்சேரியை சேர்ந்த 11 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.4.82 லட்சத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் தமிழப்பன். இவரை மர்மநபர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்டு பங்குசந்தையில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறியுள்ளார். இதனை நம்பி தமிழப்பன் மர்மநபர் அனுப்பிய போலியான பங்குசந்தையில் கணக்கு தொடங்கி, அதில் ரூ.1.81 லட்சத்தை அனுப்பியுள்ளார். பின்னர் தமிழப்பனுக்கு அதில் லாபம் கிடைத்துள்ளதாக காட்டியுள்ளது. ஆனால் கிடைத்த லாபத்தை தமிழப்பனால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரிய வந்தது. தொடர்ந்து கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த ரகுமான் என்பவரை மர்மநபர் தொடர்பு கொண்டு புதிதாக கிரெடிட் கார்டு கிடைத்து இருப்பதாக கூறி யுள்ளார். இதனை நம்பி மர்ம நபர் கேட்ட கிரெடிட் கார்டு விவரங்கள் மற்றும் ஓடிபி வழங்கிய, சிறிது நேரத்தில் அவரது கணக்கிலிருந்த ரூ.1.24 லட்சம் பணம் மாயமாகி விட்டது. மேலும் தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த ஆரோக்கியநாதன் என்பவர் இணையதளம் மூலமாக ரூ.1.20 லட்சத்துக்கு பொருள் ஆர்டர் செய்துள்ளார். பின்னர் ஆர்டர் செய்ததில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொடுத்துள்ளனர். அதன்பிறகே ஆரோக்கிய நாதன் ஏமாந்தது தெரியவந்தது. தொடர்ந்து கனகசெட்டிக்குளம் பகுதியை சேர்ந்த விஜய் ரூ.37 ஆயிரம், வில்லியனூரை சேர்ந்த மணிமாறன் ரூ.3,500, வைத்தியகுப்பத்தை சேர்ந்த பிரதீப்ராஜ் ரூ.1,500, தட்டாஞ்சாவடியை சேர்ந்த கோகுல்நாதன் ரூ.1000, வில்லிய னூரை சேர்ந்த சூசைராஜ் ரூ.3,500, ரெட்டி யார்பாளையம் சேர்ந்த வெங்கட்ராமன் ரூ.8,800, திருக்கனூர் பகுதியை சேர்ந்த காவியா ரூ.700, லாஸ்பேட்டையை சேர்ந்த சபரிதாஸ் ரூ.1,000 என மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளனர். மேற்கூறிய 11 பேரும் ரூ.4.82 லட்சத்தை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.