சென்னை
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது. குறிப்பாக தலைநகர் மண்டலமான சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கொரோனாவால் உருக்குலைந்துள்ளன. இதனால் இந்த 4 மாவட்டங்களுக்கும் இன்று முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை சென்னை வாலாஜா சாலையில் வாகன சோதனையை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது வாகனங்களின் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஏ.கே.விஸ்வநாதன்," சென்னையில் 12 நாட்கள் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும். வெளியில் வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்க வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். நோய்த்தொற்று பரவும் சூழல் இருந்தால் அப்பகுதியில் உள்ள கடைகள் மூடப்படும். வணிக நிறுவனங்களில் தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தியிருக்க வேண்டும்" என அவர் கூறினார்.
இன்று காலை முதல் சென்னையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விதிகளை மீறி செயல்பட்டதாக 1 மணிநேரத்திற்கு சராசரியாக 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.