கொழும்பு
கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் ஜெட் வேகத்தில் எகிறியுள்ளது. அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் போராடி வரும் நிலையில், அனைத்து துறை அமைச்சர்கள், வங்கியின் பொறுப்பாளர்கள் என அனைவரும் ராஜினாமா செய்து விட்டனர். ஜனாதிபதி மற்றும் பிரதமர் பெயரளவில் பதவியில் நீடிக்கிறனர்.
இந்நிலையில், கடும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், வரும் வாரங்களில் அவசரகால சிகிச்சை அளிக்கக் கூட போதுமான மருந்து மற்றும் மருத்துவப் பொருள்கள் இல்லாமல் அவதிப்படக்கூடும் என்று இலங்கை தேசிய மருத்துவக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி கோத்தபய ராஜபட்சேவுக்கு இலங்கை மருத்துவக் கழகம் எழுதியிருக்கும் கடிதத்தில்,"மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லாததால் ஏற்கனவே வழக்கமாக நடைபெறும் அறுவைசிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், உடனடியாக மருந்து மற்றும் மருத்துவ பொருள்களின் விநியோகம் சீரடையாவிட்டால், இன்னும் ஒரு சில வாரங்களில் அவசரகால சிகிச்சைகள் கூட அளிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் பெரும் அபாயம் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.