tamilnadu

img

கும்மிடிப்பூண்டியில் சுற்றுச்சூழலை சீரழிக்கும் தொழிற்சாலைகள் நடவடிக்கை கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டியில் சுற்றுச்சூழலை சீரழிக்கும் தொழிற்சாலைகள் நடவடிக்கை கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஜன. 22- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை ஊராட்சியில் சுற்றுச்சூழலைச் சீரழித்து, பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் தனியார் தொழிற்சாலைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறுபுழல்பேட்டை கிளை உறுப்பினர் பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால்  உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறிவிட்டதாக கடந்த 2016-ஆம் ஆண்டே சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டும், அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். சிறுபுழல்பேட்டை பகுதியில் இயங்கி வரும் சூரியதேவ், அக்குவா டெர்ரா, எனர்ஜி லிமிடெட் ஆகிய தனியார் தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சு கலந்த கரும்புகையால் ஒட்டுமொத்தப் பகுதி யும் கருமையாக மாறியுள்ளது. முறை யான சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாத காரணத்தால் நிலம், நீர் மற்றும் காற்று என அனைத்தும் நச்சாக மாறி யுள்ளன. இதன் விளைவாக, சிறு புழல்பேட்டை, முத்துரெட்டி கண்டிகை, புதுப்பேட்டை, புது கும்மிடிப்பூண்டி, சித்தராஜ கண்டிகை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிறுநீரகப் பாதிப்பு, நுரையீரல் தொற்று, இதய நோய் மற்றும் கண் பார்வை குறைபாடு போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நச்சுத்துகள்கள் படர்ந்த புற்களை மேய்வதால் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் உயிரிழந்து வருகின்றன. மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தெருவிளக்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளி ஆதிமூலம் என்பவர் அண்மையில் மின்விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு மின்சார வாரியம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. அப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமான தாமரை ஏரியில் கழிவுகள் கலப்பதைத் தடுத்து அதனைச் சீரமைக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் அறிவித்தபடி ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவினர் உடனடியாக இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் வட்ட செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் இ.ராஜேந்திரன், ஜி.சூரியபிரகாஷ், வட்டக் குழு உறுப்பினர்கள் வி.ஜோசப், எம்.சி.சீனு, ப.லோகநாதன், கிளை செயலாளர் இ.ரங்கன், வாலிபர் சங்கத்தின் பகுதி தலைவர் வசந்த்பௌத்த, கட்டுமான நிர்வாகி சி.நாகேஷ்ராவ் மற்றும் வார்டின் முன்னாள் உறுப்பினர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.