tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

பர்கூரில் உழவர் சந்தை அமைக்க சிபிஎம் கோரிக்கை

கிருஷ்ணகிரி, செப்.1 - ஆடைகள், துணிகள் ஏற்றுமதி இறக்குமதி மொத்த விற்பனை, விவசாயம் பிரதான தொழிலாக கொண்ட பர்கூரில் பேருந்து நிலையம் ஒட்டி சாலையில் மறுபுறம் ஒரு ஏக்கருக்கும் மேற்பட்ட அரசின் நிலம் உள்ளது. இங்கு பெரும்பாலான நாட்களில் உள்ளே நுழையும் வழியில் ஓரமாக சிலர் காய்கறிகள் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தனி நபர்களின் தள்ளுவண்டி உணவகங்கள் வியாபாரம் நடைபெறுகிறது. பல தனிநபர் வாகனங்கள் உள்ளே நிறுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள், வியாபாரிகள் நிறைந்த பகுதியான இங்கு பெரிய இடம் இருந்தும் பயன்படுத்தப்படாமல் ஒரு சில தனி நபர்களுக்கு மட்டும் பயன்படும் படியாக விடப்பட்டுள்ளது. இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த இடத்தில் உழவர் சந்தை அமைத்திட உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சிபிஎம் சார்பில் செயலாளர் சீனிவாசன் பர்கூர் வட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை:   போக்சோ வழக்கு பதிவு

கடலூர், செப்.1 - கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியும், அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது வாலிபரும் கடந்த மூன்று ஆண்டுகாலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சிறுமியை வாலிபர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் மூன்று மாதம் சிறுமி கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதேபோல், ஒரு சிறுமியை 18 வயது வாலிபர் கடந்த ஓராண்டு காலமாக காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சிறுமி கர்ப்பமாக உள்ளதால், கடலூர் மகளிர் நல அலுவலர் தெய்வானை கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது கடத்தல்: 3 பேர் கைது

கடலூர், செப்.1 - புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில் கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.  பண்ருட்டி யூனியன் அலுவலகம் எதிரே டிஎஸ்பி ராஜா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் புதுச்சேரி மாநில மதுபாட்டில் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் காரில் வந்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னை சைதாப்பேட்டை சாமியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் (43), மதன்குமார் (25), மணிபாலன் (23) என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து மூன்று பேரையும் கைது செய்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் மற்றும் மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். கார்த்திக் என்பவர் தப்பி ஓடிவிட்டார், அவரைத் தேடி வருகின்றனர்.