நீதிக்கு புறம்பான காவல்துறையினரின் என்கவுண்டர் கொலைகளுக்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் இம்மாதம் 5-ஆம் தேதி சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலையில் சம்பந்தப்பட்ட உண்மைக் குற்றவாளிகள் தப்பி விடாமல் உரிய தண்டனை பெற்றுத் தர தேவையான சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 11 பேரையும் தனது பொறுப்பில் எடுத்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில் திருவேங்கடம் என்பவர் தப்பி ஓடியதாகவும், புழல் வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை வைத்து காவல்துறையினரை சுட முயற்சி செய்த போது திருவேங்கடத்தை காவலர்கள் சுட்டுக் கொன்றதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு என் கவுண்டரின் போதும் இவ்வாறான காரணத்தை காவல்துறை தெரிவிப்பது வழக்கமானதாக இருக்கிறது.
சமீபத்தில் புதுக்கோட்டையில் துரை என்கிற துரைசாமி என்ற குற்றவாளி என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு காவல்துறை சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது. மனித உயிரையும், மனித உரிமைகள் குறித்தும் கவலைப்படாமல் இப்படி அடுத்தடுத்து என்கவுண்டர்கள் என்பது சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்குவதாகும்.
குற்றங்கள் நடைபெறுவதை தடுப்பதற்கு என் கவுண்டர்கள் தீர்வல்ல. புலன் விசாரணையை பலப்படுத்தவும், வழக்குகளை விரைந்து முடிப்பதும், சட்டத்தின் வழிமுறையில் நின்று குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அரசமைப்பு சட்டத்தின் வரையறை ஆகும். மேலும், தேசிய மனித உரிமை ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகியவை கொடுத்துள்ள இதுதொடர்பான வழிகாட்டுதல்களை காவல்துறையினர் உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.