tamilnadu

img

மரணத்தின் விளிம்பில் குடிசைமாற்றுவாரிய குடியிருப்பு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 73வது வட்டத்தில் நிலவும் சுற்றுச்சூழலால் அங்குள்ள மக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் நெரிசலான மக்கள் தொகை கொண்ட பகுதி 73வது வட்டம். ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு பொதுமக்களின் சுகாதாரம் சீர்கெட்டுள்ளது. குறிப்பாக, ஓட்டேரி, புளியந்தோப்பு, நியூ பேரன்ஸ் ரோடு, தாசமக்கான், காந்திநகர், பெரியார்நகர், கிரேநகர் பள்ளம், பென்சனர் காலனி, வாழைமாநகர் போன்ற பகுதிகளில் வாழமுடியாத நிலை உள்ளது.

இடிந்து விழும் குடியிருப்புகள்

1970ஆம் ஆண்டு கிரே நகர் பள்ளம் பகுதியில் பெரியார் நகர் குடியிருப்பு என்ற பெயரால் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உருவாக்கப்பட்டது. 450 வீடுகளுடன் 15 பிளாக்குகளாக அமைந்துள்ள இந்த குடியிருப்பு பகுதி கடந்த 50 ஆண்டுகளாக பழுதுபார்ப்பு, பராமரிப்பு இன்றி உள்ளது. இதனால் குடியிருப்புகள் விரிசலடைந்து தளங்கள், படிகட்டுகள், பால்கனி போன்றவை அவ்வப்போது இடிந்து விழுகின்றன. கடந்த ஆண்டு பெய்த மழையில் 12வது பிளாக் சுவர் இடிந்து விழுந்ததால் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர்கள் பி.சுரேஷ், எம்.அசோக் ஆகியோர் கூறுகையில், “கிரே நகர் பள்ளம் பகுதியில் வாரிய குடியிருப்பு, சாலையோரம் வசிப்பவர்கள் என 3 ஆயிரம் பேர் உள்ளனர். ஆனால் ஒரு பொதுக்கழிப்பிடம் கூட இல்லை. 73வது வட்டத்தில் மாநகராட்சி நிர்வகித்து வந்த 9 பொதுக் கழிப்பிடங்களில் 6 கழிப்பிடங்கள் காணவில்லை. இதனால் பெண்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.  தற்காலிக கழிப்பிடத்திற்கு கட்டணம் வசூலிப்பதால் அங்கு மக்கள் செல்வதில்லை. கழிப்பிடம் இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது” என்றனர்.

நவீன வாகனங்கள் எங்கே?

“புளியந்தோப்பு பகுதியில் நியூ பேரன்ஸ் சாலையின் விதிமுறைக்கு மாறாக, இருபுறமும் பழைய வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.காவல்துறையை ‘கவனித்துவிட்டுத்தான்’ வண்டிகளை நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.  சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பை, இறைச்சி கழிவுகள், திடக்கழிவுகளை மாநகராட்சி நிர்வாகம் முறையாக அகற்றுவதில்லை. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பை அள்ளும் வாகனங்கள், குப்பை சேகரிப்பு தொட்டிகள், சாக்கடை அடைப்பை நீக்கும் கருவிகள் வாங்கியதாக மாநகராட்சி கூறினாலும், இந்தப் பகுதியில் அவற்றை பயன்படுத்தி பார்த்ததே இல்லை. அம்பேத்கர் சிலை அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் குப்பை கொட்டும் வளாகமாகவும், மாடுகள் கட்டும் கொட்டகையாகவும் மாற்றப்பட்டு வருகிறது” என்றும் அவர்கள் கூறினர்.

கவன ஈர்ப்பு போராட்டம்

தேர்தல் நேரத்தில் மட்டும் வரும் ஆளும் கட்சியினர், உள்ளாட்சித் தேர்தலில் எப்படி வந்து வாக்கு கேட்பார்கள் என்று பார்ப்போம் என்ற கோபம் மக்களிடம் உள்ளதாகக் கூறிய அவர்கள், “ஆட்சியாளர்களின் மெத்தனத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, கையெழுத்து இயக்கம் நடத்தி போராட்டத்திற்கு மக்களை திரட்டி வருகிறோம். டிசம்பர் முதல் வாரத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் மிகப்பெரிய போராட்டதை நடத்துவோம்” என்றும் அவர்கள் உறுதிபட கூறினர்.

உயிரிழந்தால்தான் நடவடிக்கையா?

“சிறு அதிர்வுகளுக்கு கூட வாரிய வீடுகளின் சில பகுதிகள் இடிந்து விழுவது சாதாரணமாக நடக்கிறது. ஒரு கை அல்லது கால் நுழையும் அளவிற்கு கட்டிடத்தில் விரிசல்கள் விழுந்துள்ளன. இரண்டு பிளாக்குகளுக்கு இடையே திடக்கழிவுகளோடு, இறந்த நாய், எலி, பூனைகள் வீசப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. படிக்கட்டுகள் அவ்வப்போது இடிந்து விழுகிறது. இதுகுறித்தெல்லாம் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயன் இல்லை, சொந்த பணத்தை வைத்தே சிறுசிறு மராமத்து பணிகளை செய்து கொள்கிறோம். குடியிருப்பு முழுமையாக இடிந்துவிழுந்து மிகப்பெரிய உயிர்சேதம் நிகழ்ந்தால்தான் குடிசை மாற்று வாரியம் ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என தெரியவில்லை” என்று ஆதங்கத்தோடு அப்பகுதியை சேர்ந்த விநாயகமும், பத்மாவும் கூறுகின்றனர்.

பூங்கா

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளி எம்.சுப்பிரமணி தெரிவிக்கையில், “இந்த பகுதியில் நிலவும் சூழலால் என்னை போன்றே பல மூத்த குடிமக்கள் நிம்மதியின்றி உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட டேங்மேட் சாலை அரசு தாய்சேய் நல மருத்துவமனை கடந்த 8 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. அதனை புணரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,  தார்ச் சாலையோரங்களில் தேங்கி நிற்கும் மண், குப்பைகளை அகற்ற வேண்டும். இப்பகுதியில் நடைபயிற்சிக்கான பூங்காக்கள் ஒன்றையும் அமைக்க வேண்டும்” என்றார். “கிரே பள்ளத்தில் உள்ள வாரிய வீடுகளை இடித்துவிட்டு, பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.60.44 கோடி செலவில் புதிதாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான பணிகளை துவங்காமல் உள்ளனர். பெரிய அசம்பாவிதங்கள் நிகழும் முன்பு வாரிய அதிகாரிகள் விரைந்து செயலாற்ற வேண்டும்” என்று அப்பகுதியைச் சேர்ந்த முகமது இஸ்மாயிலும், ஜீவானந்தமும் எதிர்பார்க்கின்றனர். “45 வருடமாக இந்த குடிசைமாற்று வாரிய குடியிருப்புல இருக்கோம், வீடு கொஞ்சம் கொஞ்சமா இடிஞ்சிகிட்டு வருது. போனவாட்டி மழை பேஞ்சப்ப படிகட்டும், பால்கனியும் இடிஞ்சி போச்சு, பொண்ணு கல்யாணத்துக்கு வச்சிருந்த பணத்த வச்சு உடைசலை சரி செய்து விட்டோம். நான் குடியிருக்குறது வீடா அல்லது பெரிய சைசு சமாதியான்னு தெரியல, ஏதாவது பன்னி காப்பாந்துங்கய்யா” என்று தேவியும், நாராயணனும் வேதனையோடு பேசினர். பட்டா பென்ஷனர் லைன் பகுதியில் குடியிருக்கும் வேலாயுதம், ராதிகா குறிப்பிடுகையில், “ ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்காக ஒதுக்கப்பட்ட இந்த பகுதியில் நீண்ட நாட்களாக குடியிருக்கிறோம். ஆனாலும் அரசு பட்டா வழங்காமல் உள்ளது. உழைத்து  வாழும் எங்களை ‘புறம்போக்கு’ என சொல்லும் அவலநிலையில் இருக்கிறோம். அண்மையில் அரசு பிறப்பித்துள்ள அரசாணைப்படி பட்டா வழங்க வேண்டும்” என்றனர்.

மாதம் ஒருமுறை மருத்துவ முகாம்

தலையணை செய்யும் தொழிலாளி மொய்தீனுடன் சொல்லும்போது, “மழைநீர் வடிகால்வாய்கள்  தூர்ந்துள்ளன. மழைக்காலத்தில் சாக்கடையும் மழை நீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழைக் காலங்களில் பத்திரிகை போட்டோகிராபர்கள் எங்கள் ஏரியாவிற்கு படையெடுத்து வரும் அளவிற்கு வீடுகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. அவ்வப்போது ‘மர்மக்காய்ச்சல்’ மக்களை தாக்குகிறது. திடீர் நோயால் மரணங்கள் ஏற்படுகின்றன. சுகாதாரத்துறை சார்பில் மாதம் ஒரு முறை மருத்துவ முகாம் நடத்த வேண்டும்” என்றார். கட்டுமான சங்கத்தின் திரு.வி.க.நகர் பகுதித் தலைவர் என்.மோகன் கூறுகையில், “சில மாதங்களுக்கு முன்பு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது கட்சியினர், ஊடகங்களோடு வந்து, உங்கள் பிரச்சனைகளை சரி செய்கிறேன் என்று கூறிவிட்டு போனார். ஆனால் எந்த வேலையும் நடைபெற வில்லை. கிரே நகர் வாரிய குடியிருப்பில் அசம்பாவிதங்கள் நிகழும் முன்பு, பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும். தற்போதுள்ளவர்களுக்கு அருகிலேயே தற்காலிக குடியிருப்பை அமைத்து தர வேண்டும். உடற்பயிற்சி கூடம், 24 மணி நேர அரசு மருத்துவமனை, நூலகம் போன்ற கட்டமைப்பையும் அமைக்க வேண்டும்” என்றார். குப்பை அகற்றுவது குறித்து சென்னை மாநகராட்சி துப்புரவு அதிகாரி (சிஐ) சீனிவாசனிடம் கேட்டபோது, “நியூபேரன்ஸ் சாலை, பென்சனர் லைன், கிரே பள்ளம், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் குப்பைகள் அள்ளப்படுகிறது. வாரிய குடியிருப்பின் இரண்டு கட்டிடங்களுக்கு மத்தியில் மின்சாரப் பெட்டிகள் உள்ளன. அவற்றை சுற்றியே கழிவுப் பொருட்கள் உள்ளன. மனிதர்களை கொண்டுதான் அகற்ற வேண்டியுள்ளது. வாகனங்களைக் கொண்டு பணி செய்வது சிரமமாக உள்ளது. எனவே, கழிவுப் பொருட்களை அகற்றுவது சவாலாக உள்ளது.” என்றார்.

-ம.மீ.ஜாபர்