சென்னை:
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு ஜூன் 13 அன்று டியுசிஎஸ் நியாயவிலைக் கடையில் பணியாற்றும் எஸ்.சுரேஷ்குமார் மரணமடைந்தார்.
அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.இது தொடர்பாக கூட்டமைப்பு நிர்வாகிகள் இரா.பொன்னுரங்கம் (தொமுச), ஆ.கிருஷ்ணமூர்த்தி (சிஐடியு), பி.அன்பழகன் (ஐஎன்டியுசி), சி.தணிகாச்சலம் (டிடியுசி), வி.கவியரசன் (ஜெஎம்எஸ்), கே.குப்பன் (இன்டேன்) ஆகியோர் இணைந்து முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
மேலும் அந்த கடிதத்தில், நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கும், கட்டுநர்களுக்கும் வழங்கப்படும் ஊக்கத் தொகையையும், காப்பீட்டு தொகையையும் உயர்த்த வேண்டும். தொற்று காரணமாக ஊழியர்கள் உயிரிழந்தால் 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று சோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.