சென்னை:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா, பொதுமக்களை மட்டுமல்லாது, முக்கிய பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அந்த வகையில், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், தமிழக அமைச் சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே தமிழக அமைச்சர்களில் கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ, பி.தங்கமணி, நிலோபர் கபில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே, அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கார் ஓட்டுநருக்கு ஏற்கனவே வைரஸ் தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அமைச்சரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை நடக்கிறது.