சென்னை:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி வளாகத்தில் ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.ஆலோசனைக்குப் பின் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் தொடரும். கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இனி அரசின் முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை தொடரும்.அரசு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். விதிகளை மீறி வெளியே சுற்றும் நோயாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் கூறினார். அப்போது உடன் இருந்த சென்னை மாவட்டத்திற்கான சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் ஒரு மாதத்துக்கு முக கவசம் அணிய வேண்டும். அப்படி முக கவசம் அணிந்தால் கொரோனா பரவல் குறைய வாய்ப்பு உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம்.தண்டையார்பேட்டை, ராயப் பேட்டை மண்டலம் சவாலான பகுதியாக இருப்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வார்டு வாரியாக கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை நடததப்பட்டது. தெருத்தெருவாக நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனை நடத்தப்படுகிறது.கொரோனா பகுதியில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும். வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் முறை தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.