tamilnadu

img

ஸ்டாலின் ஆலோசனை நடத்திய ஆம்பூர் மண்டபத்திற்கு சீலை அகற்றக்கோரி வழக்கு

சென்னை:
வேலூர் அருகே மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய ஆம்பூர் மண்டபத்துக்கு வைக்கப் பட்ட சீலை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வேலூர் மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து, தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை வியாழனன்று தொடங்கினார். ஆம்பூர் தனியார் ஷூ தொழிற்சாலை தொழிலாளர்களிடையே திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசினார். அதைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய பள்ளி வாசல்களின் முத்தவல்லிகள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டம் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. 

கூட்டம் நடந்து முடிந்த பிறகு மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சென்றுவிட்டார். அதைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர், ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம், ஆம்பூர் நகரக் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், வட்டாட்சியர் சுஜாதா ஆகியோர் சென்று கூட்டம் நடத்துவதற்கு அனுமதி பெறாத காரணத்தாலும், அந்தக் கூட்டம் நடைபெறுவது குறித்து மண்டபத்தின் நிர்வாகி தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்காத காரணத்தாலும் ஆம்பூர் வட்டாட்சியர் சுஜாதா முன்னிலையில் வருவாய்த் துறையினர் மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில் வேலூர் அருகே மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய ஆம்பூர் மண்டபத் துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் 4ஆம் தேதி நிகழ்ச்சி நடக்கவிருப்பதால் மண்டபத்துக்கு வட்டாட்சியர் வைத்த சீலை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருமண மண்டப நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கை உயர்நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க உள்ளது.