சென்னை:
டாஸ்மாக் கட்டிடங்களில் கான்கிரீட் மேற்கூரை அமைக்க ஊழியர்கள் நிர்ப்பந்திக்கப்படுதற்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சம்மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் விடுத்துள்ள அறிக்கை:
தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக் கடைகள் தனியார் கட்டிடங் களில் வாடகை அடிப்படையில் செயல்படுகின்றன. இந்த கடைகள் வணிக கட்டிடங்களாக இல்லாமல் குடியிருப்பு கட்டிடங்களாகவே உள்ளாட்சி அமைப்புகளில் பதியப்பட்டு வீட்டு வரியும் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் உள்ளாட்சி அமைப்புகளில் வணிக கட்டிட அனுமதி பெறாமல் உள்ள கடைகளை மூட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
டாஸ்மாக் நிர்வாகம் கட்டிட உரிமையாளர்களிடம் கட்டிட அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடாமல் ஊழியர்களை நிர்ப்பந்தம் செய்தது. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் முறையாக கட்டிட அனுமதி பெறாமல் மதுபானக் கடைகளை நடத்தி வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட கடைகள் பாதுகாப்பற்ற கல்நார் கூரைகளையும், தகடுகளான கூரைகளை யும் கொண்ட கட்டிடங்களில் இயங்கி வருகின்றன.
நீதிமன்றத்தை ஏமாற்றுவதற்காக
டாஸ்மாக் கடைகளுக்கான இடம் குறித்தான வாடகை ஒப்பந்தத்தில் கட்டி டத்தின் வரைபடம், வணிகக் கட்டிட அனுமதி உள்ளிட்ட அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு அதிகாரிகள் நேரடி ஆய்வுக்கு பிறகு மாவட்ட ஆட்சி தலைவர் களின் ஒப்புதலோடுதான் டாஸ்மாக் கடை அனுமதிக்கப்படுகிறது. அப்போது கட்டிடங்கள் கல்நார், தகடுகளால் ஆனதாக இருப்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளா மல் எந்தவகையிலாவது கடைகளை திறப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.
தற்போது டாஸ்மாக் அதிகாரிகள் கடை ஊழியர்களிடம் கான்கீரிட் தளங்கள் உடனடியாக அமைக்க வேண்டும் என்று அவசரம் காட்டி வருவது நீதிமன்றத்தை ஏமாற்றுவதற்காகவே என்று டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் குற்றம் சாட்டுகிறது.கட்டிடத்திற்கான வாடகை பெறும் கட்டிட உரிமையாளரை பொறுப்பாக்காமல் ஊழியர்களிடம் கடையை மூடி விடுவோம் என்று பணி பயத்தை உருவாக்கி ஊழியர்களது செலவில் கான்கிரீட் கூரை அமைக்க டாஸ்மாக் அதிகாரிகள் மிரட்டி வருவது கண்டனத்திற்குரியது.
தனியார் கட்டிடங்களுக்கு வாடகைத் தொகை நிர்ணயிப்பது, அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு வாடகை என பல்வேறு முறைகேடுகளும் நடந்துள்ளன.இப்பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கடை ஊழியர் களை கான்கிரீட் கூரைகள் அமைக்க நிர்ப்பந்தம் செய்வதை தடுத்து நிறுத்தவும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் டாஸ்மாக் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்துகிறது.