சென்னை:
சுதந்திர போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் பகுதிக் குழு சார்பில் ரத்ததான முகாம் சென்னை அயனாவரத்தில் உள்ள நிர்மல் பள்ளியில் ஞாயிறன்று (ஜூலை 11)நடைபெற்றது.
பகுதித் தலைவர் கே.பி.நிகில்தேவ் தலைமையில் நடைபெற்ற ரத்ததான முகாமை தொடங்கி வைத்த திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன், ‘நூற்றாண்டு விழா காணும் தோழர் சங்கரய்யா பிறந்தநாளையொட்டி நடைபெறும் இந்த முகாமை துவக்கி வைப்பதை அரிய வாய்ப்பாக கருதுகிறேன்’ என்றார்.மாணவர் பருவத்திலேயே தன்னை அரசியலில் இணைத்துக் கொண்டு நேர்மையாக பணியாற்ற முடியும் என்றால் அது இடதுசாரி இயக்கத்தால் மட்டும்தான் சாத்தியம். இதற்கு தோழர்கள் என்.சங்க
ரய்யா, ஆர்.நல்லக்கண்ணு இன்றும் சாட்சியாக விளங்குகின்றனர். இன்றைய தலைமுறையினர் அந்த தலைவர்களின் பாதையை பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.விளம்பர அரசியல் மேலோங்கி நிற்கும்இந்த காலத்தில், பெரும்பாலான அரசியல்வாதிகள் ஊழல், தனிமனித ஒழுங்கீனத்தால் சிறைக்கு செல்கின்றனர்.
ஆனால் தோழர் என்.சங்கரய்யா மக்களுக்காக போராடி 8 ஆண்டுகள் சிறை சென்றவர்.அதுபோல்தான் இடதுசாரி தலைவர் களும் சிறை சென்றுள்ளனர் என்றும் அவர்குறிப்பிட்டார்.தன் உதிரத்தை வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக அர்ப்பணித்தவர் தோழர் என்.சங்கரய்யா. அவரது 100ஆவது பிறந்தநாளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உதிரம் வழங்குவது பெருமைக்குரிய செயல் என்று பாராட்டியதோடு, அரசியல்என்பது மகத்தான ஆயுதம். அதை மக்களுக்கான ஆயுதமாக மாற்ற வேண்டும் என்றும் வாலிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.இதில் மாநில துணைச் செயலாளர் கே.எஸ்.கார்த்தீஷ்குமார், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் கே.மணிகண்டன், செயலாளர் எஸ்.மஞ்சுளா, மாவட்ட ரத்ததானக் கழக பொறுப்பாளர் ஜெ.பார்த்திபன், மாணவர் சங்க மாவட்டத்தலைவர் எஸ்.மிருதுளா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, வில்லிவாக்கம் பகுதி செயலாளர் எம்.ஆர்.மதியழகன், தமுமுக மாவட்டச் செயலாளர் தாகா நவின், பகுதி செயலாளர் அப்துல்ரகுமான், வாலிபர் சங்க பகுதி செயலாளர் யூஜின் பர்க், பொருளாளர் ஏ.டேவிட்,பத்திரிகையாளர் ஆர்.சி.வினோத் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.