tamilnadu

img

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அங்கன்வாடி ஊழியர்கள் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு....

சென்னை:
கொரோனா தொற்று பேரிடரில் அரசுக்கு துணை நிற்கும் வகையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஒரு நாள் ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவுசெய்துள்ளனர். 

இது குறித்து சங்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.ரத்தினமாலா, மாநிலப்பொதுச்செயலாளர் டி.டெய்சி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி மக்களை பெரிதும் பாதித்து வருகிறது. புதிய அரசு பொறுப்பேற்று மக்களை பாதுகாத்திட பல்வேறு முயற்சிகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது பாராட்டுக்குரியது.தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் தமிழகத்தில் ஏற்படும் பேரிடர் காலத்தில்தமிழக அரசுக்கு தனது உறுப்பினர்கள் மூலமாக உதவி செய்துவந்துள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டு கொரோனா தொற்று நிதி, கஜா புயலின்போதும் ஒருநாள் ஊதியம் மட்டுமல்லாமல் ஏராளமான பொருளுதவி செய்துஅரசுக்கு துணை நின்றுள்ளது. கொரோனா ஊரடங்கின் போது தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் தங்களது உயிரையும் துச்சமென மதித்து நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்துகுடும்பங்களுக்கும் உதவி புரிந்துள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.அதே போன்று தற்போதைய பேரிடரில் அரசுக்கு துணை நிற்கும் வகையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சர் பொதுநிவாரணநிதிக்கு வழங்கி தமிழக மக்களை பாதுகாக்கும் தமிழக அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.