அண்ணா நகரில் ரூ.97 கோடியில் ‘ரெரா’ அலுவலக கட்டிடம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, நவ.18- தமிழகத்தில் கட்டிடம் மற்றும் மனை விற்பனைத் துறையை ஒழுங்குபடுத்தும் ரெரா மற்றும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்துக்கு, சென்னை அண்ணா நகரில் ரூ. 97 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (நவ.17) திறந்து வைத்தார். இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கட்டிட மற்றும் மனை விற்பனைத் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், நுகர்வோர் நலனைப் பாதுகாக்கவும், அவர்களின் குறைகளுக்கு விரைந்து தீர்வு காணவும் ரெரா மற்றும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு அமைப்புகளுக்காகவும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 19,008 சதுர அடியில், ரூ. 77.6 கோடி செலவில் 56 ஆயிரம் சதுர அடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், ரூ. 19.49 கோடி செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இக்கட்டிடத்தில் நவீன வசதிகள், வாகன நிறுத்துமிடம், பொதுமக்களுக்கான தகவல் மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் நா.முருகானந்தம், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத் தலைவர் எம்.துரைசுவாமி, ரெரா தலைவர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
