tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

நவ. 23-ல் பராமரிப்புப் பணிக்காக 49 மின்சார ரயில்கள் ரத்து!

சென்னை, நவ.18-  சென்னை - அரக்கோணம் இடையே உள்ள திருநின்றவூர் ரயில் நிலையப் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், வரும் நவம்பர் 23 அன்று(சனிக்கிழமை) 49 புறநகர்  ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்துச் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நவ.23 காலை 7 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை திருநின்றவூர் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அந்த நேரத்தில் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 49 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் இயக்கம் எனினும், பயணிகளின் வசதிக்காக அதே நாளில் (நவ.23) காலை 6.30 மணி முதல் 11 மணி வரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம், திருத்தணி, ஆவடி ஆகிய பகுதிகளுக்கு இடையே 17 பயணிகள் சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படவுள்ளன என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எஸ்ஐஆர்: சென்னையில் நவ. 25 வரை வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும்

சென்னை, நவ.18-  2026 பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி, வாக்காளர்களின் சந்தேகங்களைத் தீர்க்கச் சென்னையில் செவ்வாயன்று (நவ.18) முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரை வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அறிவித்துள்ளார். மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களில் இந்த உதவி மையங்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இந்த மையங்களில் வாக்காளர்க ளுக்குக் கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். மேலும், வாக்காளர்கள் தங்களது பெயர் 2005-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களையும் சரிபார்க்கலாம். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்குத் துணையாக ஒருவர் வரலாம். இந்தப் பணிகள் வெற்றிபெற, அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றும், அவர்கள் தினந்தோறும் அதிகபட்சம் 50 நிரப்பப்பட்ட படிவங்களைச் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் மாநகராட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சேப்பாக்கம் சட்ட மன்றத் தொகுதியில் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைச் சரிபார்த்து, வாக்குச்சாவடி அலுவலர் செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்த பயிற்சியை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் கௌசிக் ஆய்வு செய்தார்.

மூன்றாம் தலைமுறை நெல் நடவு இயந்திரங்கள் அறிமுகம்

சென்னை, நவ.18-  முன்னணி வேளாண் உபகரண நிறுவனமான எஸ்கார்ட்ஸ் குபோடா லிமிடெட், KA6 மற்றும் KA8 ஆகிய மூன்றாம் தலைமுறை நெல் நடவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பானில் வடிவமைக்கப்பட்ட இவை, உயர் உற்பத்தித்திறன், இயக்குபவர் சௌகரியம் மற்றும் துல்லியமான நடவு வழங்குகின்றன. தமிழ்நாடு உட்பட ஏழு மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முறையே 21 மற்றும் 24 குதிரைத்திறன் என்ஜின்களால் இயங்கும் இவை, திறன்மிக்க திருப்ப அமைப்பு, தானியங்கி தூக்கும் வசதி, கிடைமட்டக் கட்டுப்பாடு, மறுவடிவமைக்கப்பட்ட நடவு அமைப்புகள் கொண்டவை. பரந்த தளம், பயன்பாட்டிற்கு ஏற்ற வடிவமைப்பு, எல்இடி விளக்குகள் இயக்குபவரின் சௌகரியத்தை உறுதி செய்கின்றன. இயந்திரமயமாக்கலை விவசாயிகளுக்கு அதிகார மளிக்கும் தேசிய இலக்காகவும், உலகளாவிய தொழில்நுட்பத்தை உள்ளூர் புரிதல்களுடன் இணைப்ப தாகவும் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பாரத் மதன் கூறினார். வேளாண் தீர்வுகள் தலைவர் ராஜன் சுக், தொழிலாளர் பற்றாக்குறை போன்ற உண்மையான சவால்களை சமாளிக்க இவை வடிவமைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தொழில்முனைவோருக்காக அகர்பத்தி தயாரிப்பு பயிற்சி சென்னையில் நடைபெறுகிறது

சென்னை, நவ. 18-  தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், இரண்டு நாள் அகர்பத்தி பொருட்கள் தயாரிப்புப் பயிற்சி வரும் நவம்பர் 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சி ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள  நிறுவன வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பாரம்பரிய மற்றும் அதிக தேவை உள்ள அகர்பத்திகள், மூலிகை அகர்பத்தி, சாம்பிராணி, மூலிகை மெழுகுவர்த்திகள், பூஜை எண்ணெய், கற்பூரக் கேக், சந்தன மாத்திரைகள், உலோக சுத்திகரிப்பு திரவங்கள் உள்ளிட்ட 17 வகையான பொருட்களைத் தயாரிக்க இந்தப் பயிற்சியில் கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் என 18 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம். குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதி வசதியும் வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் www.editn.in என்ற இணையதளத்திலோ அல்லது 9360221280 / 9840114680 ஆகிய எண்களிலோ (திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.