தேசிய தொழில்நுட்ப கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சாதனை
மங்களூரு, நவ.18- கர்நாடக மாநிலம் மங்களூர், சூரத்கல்லில் உள்ள கர்னாடக தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் 23வது பட்டமளிப்பு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் 193 முனைவர் பட்டங்கள் உட்பட 1995 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 4 மேடைகள் அமைத்து ஒரு மணி நேரத்தில் அனைவருக்கும் பட்டங்கள் வழங்கி புதிய சாதனை படைக்கப்பட்டது. விழாவில் 935 பி.டெக், 641 எம்.டெக், 66 எம்.சி.ஏ, 69 எம்பிஏ மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 1455 மாணவர்கள் நேரில் கலந்துகொண்டனர். அவர்களுடன் 1885 பெற்றோர்களும் வந்திருந்தனர். வால்வோ குழுமத்தின் தலைவர் கமல் பாலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, முழுமையான நிலைத்தன்மை மற்றும் புதுமையின் முக்கியத்துவம் குறித்து பேசினார். கல்லூரி இயக்குனர் பேராசிரியர் பி. ரவி, கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கல்லூரி அடைந்துள்ள விரைவான முன்னேற்றத்தை விளக்கினார். 41 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டன.
