சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவற்றை வருகிற நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்யச் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு பதிவுசெய்யப்படாத விடுதிகள் http://tnswp.com என்ற இணையதளம் மூலமாகப் பதிவு செய்யலாம். இப்பதிவு மேற்கொள்ள அறக்கட்டளை பதிவு பத்திரம், பார்ம்-டி லைசன்ஸ், சொந்த கட்டடம்/ வாடகை ஒப்பந்தப் பத்திரம், கட்டட வரைபடம், கட்டட உறுதிச்சான்று, தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று, காவல்துறையின் சரிபார்ப்பு சான்று. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின்(FSSAI) ஐடி மற்றும் கணக்காய்வு அறிக்கை (IT & Audit Statement) சுகாதாரத் துறைச் சான்று ஆகிய சான்றுகளுடன் http://tnswp.com என்ற இணையதளம் மூலமாக வருகிற நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இப்பதிவு குறித்து சந்தேகங்களுக்கு DSWO CUG 9150056800 அவ்வாறு முறையாகப் பதிவு செய்யப்படாத தனியார் விடுதி மற்றும் இணை நிர்வாகிகள் மீது சட்டப்படி காவல்துறை மூலமாக வழக்குப்பதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 50,000/- அபராதம் விதிக்கப்படும் என்ற விவரம் சென்னை மாவட்டத்தில் செயல்படும் மகளிர் விடுதிகளுக்குத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இஆப. தெரிவித்துள்ளார்.