மாதிரி சட்டமன்றம்...
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் திங்களன்று தொடங்கியது. கலைவாணர் அரங்கம் தற்காலிக பேரவை போன்று இல்லாமல் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்றம் போல் வடிவமைக்கப்பட்டிருந்தது.
*******************
சோதனை...
இந்த மூன்று நாள் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப்போர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சட்டப் பேரவைச் செயலாளர் தற்காலிகமாக வழங்கிய அடையாள அட்டை வைத்திருந்த பத்திரிகையாளர்கள் சட்டப்பேரவை ஊழியர்களும் பரிசோதனைக்குப் பிறகே பேரவை தோட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
*******************
சபை ஒத்திவைப்பு
கலைவாணர் அரங்கில் கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.அதேபோல் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களுக்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மறைவுக்கும் நடப்பு சட்டப் பேரவை திமுக உறுப்பினரான ஜெ. அன் பழகன் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து தமிழக சட்டப்பேரவை திங்களன்று (செப்.14) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் 15 நிமிடமே கூட்டம் நடைபெற்றது.
*******************
காவிக்கு மாறிய அமைச்சர்
சமீபகாலமாகவே மத்திய பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் பாராட்டி பேசிவரும் பால்வளத்துறை அமைச்சர்ராஜேந்திர பாலாஜி, கலைவாணர் அரங்கில் திங்களன்று கூடிய சட்டப்பேரவை கூட்டத்தில் காவி கலர் சட்டை அணிந்துவந்தார். வழக்கமாக வெள்ளை வேட்டியும்சட்டையும் அணிந்துவரும் ராஜேந்திர பாலாஜி காவி உடைக்கு மாறியிருந்தார்.
*******************
“நீட்” எதிராக...
சட்டமன்றப் பேரவை கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரிய வாசகம் பொறிக்கப்பட்ட முகக் கவசம் அணிந்திருந்தனர்.
*******************
முகக் கவசம்...
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணை தலைவர் துரைமுருகன், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி முகக்கவசம், அடையாள அட்டை அணிந்து பங்கேற்றனர்.