ஆந்திரா - ஒடிசாவை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆகஸ்ட் 30 ஆம் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். தேனி, திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். தமிழ்நாட்டில் இதர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மற்றும் கோவையில் 30 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதன் காரணமாக மத்திய மேற்கு கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் மன்னார் வளைகுடா, தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.