tamilnadu

img

கொரோனா புள்ளி விவரங்கள் கேட்டு வழக்கு.... அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:
கொரோனா தொற்று குறித்த முழுமையான புள்ளிவிவரங் களை மாவட்ட வாரியாக வெளியிட உத்தரவிடக் கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் ராஜன் தாக்கல் செய்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டவர்கள், தொற்று உறுதி செய்யப் பட்டவர்கள், கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்களை சுகாதாரத் துறை வெளியிட்டு வருகிறது.நூறு நாட்களுக்கு மேல் இந்த விவரங்களை வெளியிட்டபோது, அவை முழுமையான வகையில் இல்லை என்றும், மாவட்ட வாரியாக முழுமையான தகவல்களை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியும் மதுரை மத்திய தொகுதியின் திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், போதுமான விவரங்கள் இல்லாவிட்டால் ஆய்வு முடிவுகள் தவறாகக் கூடும் எனவும் முழுமையான தகவல்களை வெளியிடாவிட்டால் தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் பலன் தராது எனவும் குறிப்பிட்டுள்ளார்.மதுரை மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து, இதுநாள் வரை அங்கு தொற்றைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் திறமையானதாக இல்லை என்பதையே நிரூபிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.முழுமையான தகவல்களை வெளியிட்டால்தான், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். குறைபாடுடைய மற்றும் மறைக்கப்பட்ட தகவல்கள், கொரோனா நோய் குறித்த பெருத்த சந்தேகத்தை கிளப்பும் வகையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பகுதியில் முழு ஊரடங்கையும், மற்றொரு பகுதியில் எளிதான விதிமுறைகளுடனும் அமல்படுத்துவதால் மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லை தாண்டிச் செல்வதும், சரக்குகளைப் பதுக்குவதும், கொரோனாவைப் பரப்புவதற்கும் காரணமாகிவிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.உயிரிழப்பு எண்ணிக்கையை வைத்துதான் ஒரு நோயின் தீவிரத்தைக் கணிக்க முடியும் என்ற நிலையில், கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக் கையை மறைத்துள்ளதாகவும், ஒரே நாளில் 460 பேர் பலி என அறிக்கை வெளியிட்டதையும் சுட்டிக்காட்டிய மனுதாரர், உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் விதிகளை அரசு பின்பற்றவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.கொரோனாவைக் குணப்படுத்துவதற்கான மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டிபிடிக்கப்படாத நிலையில் கொரோனாவின் தாக்கத்தை முழுமையாக அரசு வெளியிட்டால்தான், தனிமைப் படுத்திக் கொள்வது, தனிமனித விலகல் மற்றும் பாதுகாப்பு அம் சங்களைக் கடைப்பிடிப்பது குறித்து மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட வாரியாக தொற்று பாதித்தவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கைகள் உள்ளிட்ட முழுமையான விவரங் களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங் கிய அமர்வு முன் (ஆக.4) விசாரணைக்கு வந்தபோது, கொரோனா தொற்று குறித்த விவரங்களை வெளிப்படைத் தன்மையுடன் தமிழக அரசு வெளியிட்டு வருவதாகவும், மனுதாரர் திமுக எம்எல்ஏ என்பதால் தமிழக அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை வைக்கிறார் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை தொலைக்காட்சிகளில் தமிழக அரசு வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழக அரசின் விளக்கத்தை மூன்று வாரங்களில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.