சென்னை:
சாதி, மத நிர்பந்தங்களினால் ஆயுள் தண்டனை கைதிகளை திருமணம் செய்ய பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தும் முறையை கொண்டு வருவது பற்றி தேசிய, மாநில மகளிர் ஆணையம் பதில் அளிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறையில் ஆயுள்தண்டனை கைதியாக இருக்கும் தனது கணவரை விடுப்பில் (பரோலில்) விடுவிக்க கோரி பெண் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார்.இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்தபோது, தனக்கு திருமணம் ஆகும்போதுதான் கணவன் ஒரு ஆயுள்தண்டனை கைதி என்றே தெரிந்தது.கொலை வழக்கில் கீழ் நீதிமன்றம் ஆயுள்தண்டனையை விதித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, இடைக்கால பிணையில் வெளியில் வந்த அவர், அந்த விவரங்களை எல்லாம் மறைத்து தன்னை திருமணம் செய்ததாக அந்த பெண் கூறினார். இதைக் கண்டு நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோல ஒரு வழக்கு அல்ல பல வழக்குகள் நீதிபதிகள் முன்பு அடுத்தடுத்து விசாரணைக்கு வந்தது.அண்மையில், அஸ்லாம் என்பவரை 30 நாட்கள் விடுப்பில் விட சிறைத்துறைக்கு உத்தரவிடக்கோரி அவரது மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இவரும் ஆயுள்தண் டனை கைதி என்று தெரிந்து திருமணம் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், “20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கணவரை விடுப்பில் விடவேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுக்கிறார்.அவரது மனுவில்,10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் விடுப்பில் வெளியில் வந்த தன் கணவர், தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், அன்றே அவர் சிறைக்குள் சென்று விட்டதாகவும், தற்போது மாமியாருடன் வசிப்பதாகவும் கூறியுள்ளார்.இந்த பெண் சொந்த விருப் பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டாரா? அல்லது சாதி, மத நிர்பந்தங்களின் அடிப்படையில் கட்டாயத் திருமணம் நடந்ததா? என்பது தெரியவில்லை.
ஆயுள்தண்டனை கைதியை திருமணம் செய்ய எந்த ஒரு பெண்ணும் விரும்பமாட்டாள். எனவே, இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தேவை. ஒரு பெண் ஆயுள்தண்டனை கைதியை திருமணம் செய்தால், அவளது வாழ்க்கை முடங்கிப் போய் விடும். அவள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கடுமையான வேதனைகளை அனுபவிக்க வேண்டும்.திருமணமான பெண்ணுக்கு காலம் முழுவதும், தார்மீக ஆதரவும், உணர்வுகளை பகிர்ந்துகொள்ள உடல் ரீதியான ஒரு தோழமையும் கணவனிடம் இருந்து தேவைப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை.அதற்காக, தண்டனை கைதிகளை திருமணம் செய்ததாக பெண்கள் தொடர்ந்த பிற ஆட்கொணர்வு வழக்குகளும், இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும்.இந்த வழக்குகளில் தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையங்களையும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச் சகம் ஆகியவற்றை எதிர்மனுதாரர்களாக தாமாக முன்வந்து சேர்க்கின்றோம்.
சாதி, மத நிர்பந்தங்களினால் தண்டனை கைதிகளை திருமணம் செய்ய பெண்ள் கட்டாயப்படுத்தப்படுகின்றனரா? என் பது குறித்து திருமணத்துக்கு முன்பே விசாரணை நடத்துவதற்கான நடைமுறையை கொண்டு வருவது பற்றி இந்த அமைப்புகள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்” என கூறி விசாரணையை வருகிற 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.