tamilnadu

அரியவகை மரங்கள், உயிரினங்கள் அழிப்பு மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை:
வன உயிரின கடத்தல், அழித்தலை தடுக்க, தமிழக காவல் துறையில் சிபிசிஐ டி காவல்துறைக்கு அதிகாரம் வழங்கக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை அதலையை சேர்ந்த புஷ்பவனம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், தமிழகத்தில், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், அரிய வகை உயிரினங்கள், விலங்குகள், மரங்கள் போன்றவை உள்ளன.குறிப்பாக 229 வகையான அரிய இன மரங்கள், 31 வகையான பாலூட்டி வகைகள், 15 வகையான பறவை
கள், 43 வகையான ஊர்வன போன்ற அரிய வகை உயிரினங்கள் காணப்படுகின்றன. சமீப காலமாக சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு அரியவகை உயிரினங்களை கடத்துவது, அழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற செயல்களால், தட்ப வெட்ப நிலை மாற்றமடைகிறது. புவி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது. இது குறித்து யுனெஸ்கோ போன்ற அமைப்புகளும் எச்சரித்து வருகின்றன. தமிழக வனப் பகுதிகளிலும் இது போன்ற அரிய வகை உயிரினங்கள் அழிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது.

இதைத் தடுக்க வனத்துறை பாதுகாவலர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். இவர்களால் இது போன்ற குற்றங்களைத் தடுத்துநிறுத்த இயலாது.எனவே, கர்நாடகா, அசாம் போன்றமாநிலங்களில் உள்ளது போல், தமிழக காவல் துறை
யின் சி.பி.சி.ஐ.டி பிரிவில் வனப்பாதுகாப்பிற்கென ஒருபிரிவை உருவாக்க வேண்டும். அனைத்து காவல் நிலையங்களில் இத்தகைய வனக் குற்றங்களை விசாரிப்பதற்கென்று, சார்பு ஆய்வாளர் அந்தஸ்திலான அதிகாரியை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள், இது குறித்து மத்திய, மாநில அரசுகளின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர்- 7 ஆம்தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.