tamilnadu

12 ஆம் வகுப்பு தேர்வு ரத்து... இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு....

சென்னை:
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம், இதில் தலையிட முடியாது என மறுத்துவிட்டது.கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதைக் கருத்தில் கொண்டு ஜூன் 1ஆம் தேதி.சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்தது.

தொடர்ந்து தமிழக அரசும் ஜூன் 5 ஆம் தேதி அன்று 12ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து மதிப்பெண்கள் வழங்க உரிய வழிமுறைகளை வெளியிடக் குழு ஒன்றை ஏற்படுத்தியது.இந்த நிலையில் 12 ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய் ததை எதிர்த்து ராம்குமார் ஆதித் தன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந் துள்ளார்.பெரும்பாலான பள்ளிகளில் வகுப்புகள் முழுமையாக நடைபெறாத சூழலில், மேற்படிப்பு வகுப்புகளின் கல்வி சேர்க்கைத் தகுதியை நிர்ணயம் செய்து உயர்கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்தும் யுஜிசி, மெடிக்கல் கவுன்சில், ஏஐசிடிஇ, நர்சிங் கவுன்சில், டென்ட்டல் கவுன்சில், பார் கவுன்சில் உடன் கலந்து முடிவு எடுக்காமல், தமிழ்நாடு அரசின் கல்வித் துறை 12 ஆம் வகுப்பு இறுதித் தேர்வை ரத்து செய்தது தவறு. கொரோனா பரவல் குறைந்துவரும் சூழலில் இன்னும் ஓரிரு மாதங்கள் பொறுத்துத் தேர்வை நடத்தியிருக்கலாம் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதில் இடைக்காலத் தடை விதிக்க எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்துத் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.