ஒகேனக்கல், டிச.3- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 23 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது. மேலும் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிக்கக் கூடும் என்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்வரத்தை, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இறங்கவோ, அருகில் சென்று வேடிக்கை பார்க்கவோ அல்லது துணி துவைக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.