சென்னை:
ஆட்டோ தொழிலை முடக்கி தொழிலாளர்களை நடைப்பிணமாக்கும் அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சிஐடியு., தொமுச, ஏஐடியுசி, எச்எம்எஸ்., ஐஎன்டியுசி, பாட்டாளி தொழிற் சங்கம், இனோடா உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் செவ்வாயன்று (ஆக.18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், துரை, ஜி.பழனி (தொமுச), அழகேசன் (ஐஎன்டியுசி), மு.சம்பத் (ஏஐடியுசி), ஜி.காளிஸ்வரன் (டிஎம்டிஎஸ்பி), அமெரிக்க நாராயணன் (இனோடா), ஈஸ்வரன் (எச்.எம்.எஸ்), நீலகண்டன் (பிடிஎஸ்), குப்பன் (ஏஏடியு), ஷேக்காதர் (எஸ்டிடியு), வேணுராம் (தேமுதிக) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொது முடக்கம் அமலாக்கம் செய்து ஆட்டோ தொழிலாளர்கள் வாழ் வாதாரம் இழந்து சாப்பாட்டிற்கே வழி இன்றி அல்லல்படும் நிலைமைக்கு கொண்டு வந்த மத்திய மாநில அரசுகளுக்கு சங்கத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கை தொழிலின்றி வருமானமின்றி, மன அழுத்தம் காரணமாக தொழிலாளர்களும் அவரது குடும்பமும் மெல்ல மெல்ல தற்கொலைக்கு தள்ளப்படும் நிலையை மாற்ற வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தினர்.நலவாரியம் மூலம் வழங்க வேண்டிய இறப்பு நிதி கடந்த 5 மாதங்களாக வழங்கப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் வாரியம் மூலம் ஓய்வூ தியமும் வழங்கப்படவில்லை. கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை. அரசு அறிவித்த நிவாரணத் தொகை ஐந்து விழுக்காட்டினருக்கு மட்டுமே கிடைத்துள் ளது. 95 விழுக்காடு தொழிலாளர்களுக்கு பல்வேறு காரணங்களால் அழைக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு மீது குற்றம் சாட்டினர்.