மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள், சட்டங்கள் குறித்து சட்டமன்ற கூட்டத் தொடரின் போது ஒவ்வொரு முறையும் எதிர்க் கட்சிகள் அரசு மற்றும் துறை அமைச்சர்களின் கவனத்துக்கொண்டு வருவது வழக்கம். முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் விளக்கம் அளிப்பதும், தேவை என்றால் விளக்கம் பெறுவதும் வாடிக்கை.மிக குறுகிய நாட்களே நடைபெறும் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையோடு முடிகிறது. நாட்டையே உலுக்கி வரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பபெறக்கோரி கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்டதைபோன்று தமிழ்நாட்டிலும் தீர்மானம் நிறைவேற்றவில்லை.
ஹைட்ரோ கார்பன், மீத்தேன், குடியுரிமை திருத்தச் சட்டம் என மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்கள், திட்டங்கள் அனைத்தையும் மாநில அரசு அமைதியாக கேட்டுக்கொண்டிருக் கிறது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கி றது. எதையுமே தட்டிக் கேட்கவில்லை என்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சுட்டிக் காட்டினர். நிதி நிலை அறிக்கை மீதான விவாத்தின்போது “ஆளும் கட்சியின் தாரக மந்திரங்களில் ஒன்று அமைதி. உண்மையிலலே நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். மத்திய அரசு எந்த தவறு இழைத்தாலும், எந்த அநீதி இழைத்தாலும் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். அதற்காக பாராட்டுகிறோம்” என்றார் திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ்.‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி இரு முறை தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி னோம். ஆளும் கட்சி இணக்கமாக இருந்தும் மத்திய அரசு கண்டுக் கொள்ளவில்லை. நீதிமன்றத்தில் வழக்குபோட்டதோடு நின்று விட்டால் ஏழை மாணவர்கள் பாதித்தும் ஏன் மத்திய அரசை எதிர்க்கவில்லை?
விவசாயிகளை பாதிக்கும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அனுமதிக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் 3 விழுக்காடாக இருந்த வட்டியை 8 விழுக்காடாக உயர்த்திவிட்டது. அதைக்கூட தட்டி கேட்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறது அதிமுக என்று எதிர்க் கட்சி கொறடா சக்கரபாணி விவசாயிகளின் வேதனை வெளிப்படுத்தினார்.இதேபோல், “ மத்திய சுற்றுச்சூழல் அனுமதிகூட பெறாமல் ஹைரோ கார்பன் எடுக்கலாம் என நீங்கள் இணக்கமாக இருக்கும் மத்திய அரசு அறிவித்துள்ளதால் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, வேளாண் மண்டலமாக அறிவித்திருந்தால் வரவேற்றிருப்போம்”என்று எதிர் கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் என்றும் கூறினார்.
அடிக்கடி குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி,“ உங்கள் கட்சியின் (திமுக) எம்பிக்கள் மக்களவையில்தானே இருக்கிறாங்க. அங்கு குரல் கொடுக்க சொல்லுங்க. அதுக்கு தானே அவங்கள தேர்ந்தெடுத்திருக்காங்க. இங்கு பேசினா எந்த பிரயோஜனமும் கிடையாது. விவசாயிகளின் துன்பத்தை பற்றி இங்க சொன்னா நாங்க கேட்டுக்கொள்ளத்தான் முடியும். நிறைவேற்ற முடியாது. அதனால் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க சொல்லுங்க அவங்க (பாஜக) வட்டியை குறைப்பாங்க” என ஆவேசமடைந்தார். கடந்த முறை எம்பியாக இருந்த எங்க கட்சிக்காரங்க டெல்லிக்கு போய் என்ன செய்கிறாங்க? என்று கேள்வி மேல கேள்வி கேட்டாங்களே! இப்ப உங்க எம்பிக்கள் என்ன செய்யுறாங்க? அவர்கள் குரல் கொடுத்து வேளாண் மண்டலத்திற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி பெற சொல்லுங்க! என்று மேலும் ஆவேசமானார்.முதலமைச்சர், அமைச்சர்களின் செயல்பாடு “பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்கு என்ன விலை” கூறுவதுபோன்று இருந்தது.