tamilnadu

img

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

மயிலாடுதுறை, ஏப்.30- மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் பிறந்த நாள் விழா, தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.விழாவுக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் க.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மூத்த வழக்குரைஞர் நா.கு.கிருட்டிணமூர்த்தி, குத்தாலம் குயில்தோப்பு அறிவியக்க நிறுவனர் ஆ.பா.தமிழன்பன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கு.பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்ச் சங்க சிறப்புத் தலைவர் எஸ்.சிவலிங்கம் வரவேற்றார். தமிழ்ச் சங்க நிறுவனத் தலைவர் ஜெனிபர் எஸ்.பவுல்ராஜ் அறிமுக உரையாற்றினார்.குத்தாலம் முத்தமிழ் அறிவியல் மன்றத் தலைவர் செ.நடராசன் "பாவேந்தரின் பாட்டுப் புரட்சி' என்கிற தலைப்பிலும், புதுகை ஆலங்குடி இரா.வெள்ளைச்சாமி "சும்மா கிடந்த சொல்லெடுத்து" என்கிற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். முன்னதாக பாரதிதாசன் மற்றும் பட்டுக்கோட்டையாரின் உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விமல் மற்றும் சு.ரமேசு குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர் ஜெ.வீரபாண்டியன், பட்டுக்கோட்டையாரின் பாடல்களைப் பாடிப் போற்றி உரையாற்றினார். கவிஞர் விமலா நாகேஷ் கவிதை வாசித்தார். நிகழ்ச்சிகளை விழிகள் சி.ராஜ்குமார் தொகுத்து வழங்கினார். விழாவில், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொது நல அமைப்பினர் திரளானோர் கலந்து கொண்டனர். தமிழாசிரியர் மல்லியம் ச.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.