சென்னை:
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் நடைபெற்றது. அதில், மொத்தம் 59 ஆயிரத்து 756 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழு தெரிவித்தது. இந்த நிலையில் தரவரிசைப் பட்டியலில் 218 வெளிமாநிலத்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது. மேலும், அவர்கள் இரு மாநிலங்களில் விண்ணப்பித்திருப்பதாகவும் கூறப்பட்டது.இதையடுத்து, போலியாக இருப்பிடச் சான்று பெற்று 2 மாநிலங்களில் விண்ணப்பித்தவர்களை கண்டுபிடிக்கும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது 2 மாணவர்கள் போலி இருப்பிடச் சான்று கொடுத்ததும், மருத்துவப் படிப்புக்காக இரு மாநிலங்களில் விண்ணப்பித்ததும் தெரியவந்தது.இதையடுத்து அவர்களை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் நீக்கம் செய்தது. இந்நிலையில் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 22 பேர் போலி இருப்பிடச் சான்று கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களையும் தரவரிசைப் பட்டியலில் இருந்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் நீக்கம் செய்துள்ளது.