சென்னை:
மேல்நிலை தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஏற்படும் குறைகளுக்கு, கூர்ந்தாய்வு அலுவலர் மற்றும் முதன்மை, உதவி தேர்வாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என, தேர்வு இயக்கம் எச்சரித்துள்ளது.மேல்நிலை தேர்வு முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மைய மதிப்பீட்டு பணிகளுக்கான கையேட்டை, அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது. 17 பக்க கையேட் டில், முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வு அலுவலர், உதவி தேர்வாளர்களே, மதிப்பீட்டுப் பணி, அதில் ஏற்படும் தவறுகளுக்குப் பொறுப்பு என தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதில் கூறியுள்ள முக்கிய விதிகள் வருமாறு:
முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வு அலுவலர்கள் விடைத்தாளை, ஒரு நாள் மட்டும் மதிப்பீடு செய்ய வேண்டும். விடைத்தாள் எண்ணிக்கை, விடைத்தாள் ஒவ்வொன்றிலும் பக்கங்கள் சரியாக உள்ளதா எனப் பார்த்து, குறைகள் இருந்தால் முகாம் அலுவலர் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.விடைத்தாள் மதிப்பீடு செய்யும்போது, விடைக்குறிப்பை மனதில் நன்கு பதிய வைத்துக் கொள்ள வேண்டும். விடைக்குறிப் பில் குறை இருந்தால், முகாம் அலுவலர் மூலம் தீர்வு காண வேண்டும்.
மதிப்பீடு பணிக்கு வருவோர் காலை, 8:30 மணிக்குள் வர வேண்டும். திருத்தும் பணி காலை, 8:30 மணி முதல், 12:30 மணி வரையும், மதியம், 1:30 மணி முதல், 5:30 மணி வரை, நடக்கும். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் முதன்மை தேர்வாளர்கள் பச்சை நிற மையும், கூர்ந்தாய்வு அலுவலர் டர்கிஷ் புளு மையும், மதிப்பீடு செய்வோர் சிவப்பு நிற மை பயன்படுத்த வேண்டும்.கடந்தாண்டில் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர் மதிப்பீடு செய்த விடைத்தாள்களிலேயே, அதிக வேறுபாடு, மறு கூட்டல், மறு மதிப்பீட்டின் போது தவறு கண்டறியப்பட்டு, தேர்வர்கள் நீதிமன்றம் சென்றனர். எனவே, தன் மதிப்பீட்டை உயர் அலுவலர்கள் சரியாகச் செய்ய வேண்டும்.கடந்தாண்டு, விடைத்தாளின் நடுவில் இரு பக்கத்தை எழுதாமல் விட்டுவிட்டு, அதற்கடுத்த பக்கத்திலிருந்து விடைகளை, தேர்வர் எழுதி உள்ளார். மதிப்பீட்டாளரும், அதைத் தொடர்ந்த அலுவலர்களும், அதைக் கவனிக்காமல், கடைசியாக உள்ள பக்கங்கள் திருத்தப்படாமல், அவர் தோல்வி அடையும் மதிப்பெண் வந்தது. அத்தேர்வர் விடைத்தாளைப் பெற்று இப்பிரச்சனையைக் கண்டு, தேர்வுத்துறைக்கு வராமல், நேராக ஊடகங்களுக்குச் சென்றதால், தேர்வுத்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டது. இதைத் தவிர்க்க வேண்டும்.
விடைத்தாளில் தேர்வர் எழுதிய கடைசி வரியின் கீழ், டி.ஜி.இ., எச்.எஸ்.இ., என்ற முத்திரை இடப்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும். அனைத்து பக்கமும் திருத்தப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்த வேண்டும். திருத்தப்பட்ட விடைத்தாளின் முதல் பக்கத்தில், வினா வாரியாக, பக்க வாரியாக மதிப்பெண் சரியாக உள்ளதா, இவற்றின் மொத்தம் சரியாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.விடைத்தாளில் காணப்படும் கூட்டல் பிழை, மதிப்பீடு செய்யாமல் இருத்தல், மதிப்பீடு செய்தும் மதிப்பெண் பதியாமல் இருத்தல், பொதுவான கூட்டல் பிழைக்கு கூர்ந்தாய்வு அலுவலர் பொறுப்பு. வினாவுக்கு குறிப்பிட்ட மதிப்பெண்ணை வழங்குவதுடன், அதைவிட அதிகமாக வழங்காமலும், மொத்தத்தில் அதிகபட்ச மதிப்பெண்ணுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விடைத்தாள் எண்ணிக்கை, மதிப்பெண் தவறு, விடைத்தாளில் அனைத்து பக்கங்களையும் சரி பார்த்து இறுதி செய்தல், பிரதான தவறுகளுக்கு முதன்மை மற்றும் உதவி தேர்வாளர்களே பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு விதிகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.