சென்னை
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. துவக்கத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 3 மாவட்டங்களில் மின்னல் வேகத்தில் பரவிய கொரோனா தற்போது உள்மாவட்டங்களில் தனது பரவல் வேகத்தை அதிகரித்து வருகிறது.
கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியிருந்த நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக தமிழகத்தில் 3 ஆயிரத்து 827 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரதத்தில் 61 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,517 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 3,793 பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 66,571 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா இறங்குமுகம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்ற செய்தி வந்தால் முதலில் மக்கள் சென்னை எவ்வளவு என்று கேட்பார்கள். அந்தளவுக்கு தமிழக தினசரி பாதிப்பில் சென்னை மண்டலம் 60 சதவீதம் பங்கு வகிக்கும். ஆனால் கடந்த 3 நாட்களாக அங்கு கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 70 ஆயிரத்தை (70,017) கடந்தது.
இன்றைய தமிழக பாதிப்பில் 44 பேர் மாநிலத்தின் வெளிப்பகுதியில் இருந்து வந்தவர்கள். சென்னைக்கு அடுத்து மதுரையில் 245 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டில் 213 பேரும், காஞ்சிபுரத்தில் 182 பேரும், திருவள்ளூரில் 175 பேரும், தேனியில் 119 பேரும், தூத்துக்குடியில் 109 பேரும், விருதுநகரில் 86 பேரும், திருநெல்வேலியில் 84 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.