மைக்கேல்பட்டி மாணவி மரணத்தை வைத்து மத மோதல் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பிரச்சாரம் செய்த பாஜகவின் அப்போதைய மாநில தலைவர் அண்ணாமலையும், அந்த பிரச்சாரத்தை தொடர்ச்சியாக செய்து வந்த சங்பரிவார அமைப்புகளும் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்று என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நாமக்கல்லில் பிப்ரவரி 17, 18 தேதிகளில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், கே.பாலபாரதி, மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு..
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல் பட்டியில் உள்ள ஒரு கிறிஸ்தவ அமைப்பால் நடத்தப்படுகிற பள்ளியில் பயின்று வந்த லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து தமிழகமே மிகவும் சோகத்திற்குள்ளானது.
இதை பயன்படுத்தி வழக்கம்போல அப்போது பாஜகவின் மாநில தலைவராக இருந்த அண்ணாமலையும், விசுவ இந்து பரிசத், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் அது ஒரு மதமாற்ற நிர்பந்தத்தினால் ஏற்பட்ட தற்கொலை. எனவே, சம்பந்தப்பட்ட அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியதோடு மட்டுமின்றி, கிறிஸ்தவர்கள் மீது குறிப்பாக கிறிஸ்தவ சேவை அமைப்புகளின் மீது வன்மத்தை கக்கிக் கொண்டிருந்தனர். பாஜக தலைவர் நட்டா உத்தரவின் பெயரில் பாஜக தேசிய விசாரணை குழுவும் வந்து சென்றது.
இதையொட்டி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் சிபிஐ விசாரிக்கட்டும் என்று உத்தரவிட்டார். தமிழ்நாடு அரசு இது சிபிஐ விசாரிக்க வேண்டிய வழக்கு அல்ல என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபொழுது உச்சநீதிமன்றம் அதை ஏற்கவில்லை.
எனவே, சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வந்தது. இப்போது இந்த வழக்கில் சிபிஐ தனது முடிவுகளை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. அதில்,
1) லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்ற முயற்சி காரணம் இல்லை. மாணவி பேசிய எந்த ஒரு வீடியோவிலும் மத மாற்றம் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை.
2) 2010 ஆம் ஆண்டு முதல் பள்ளியில் படித்து வெளியேறிய மாணவர்களின் சான்றிதழை ஆய்வு செய்ததில் ஒருவர் கூட மதம் மாறவில்லை.
3) லாவண்யாவின் சித்தி, தந்தை ஆகியோர் பாஜக தலைவர்களின் நிர்ப்பந்தத்தால் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தனது முடிவுகளை சமர்ப்பித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகிகளும், பாஜகவின் தேசிய தலைமையும், பாஜக பத்திரிகைகளும் இந்த பிரச்சனையை நாடு தழுவிய ஒரு பிரச்சனையாக மாற்றினார்கள். அதேசமயத்தில், தேசிய குழந்தைகள் ஆணையமும் இங்கு வந்தது; ஆனால் அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
எனவே, மாணவியின் மரணத்தை பயன்படுத்தி அரசியல் லாபம் அடைவதற்காக பாஜகவும் சங்பரிவாரமும் தொடர்ச்சியாக முயற்சித்தார்கள் என்பதை சிபிஐ முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கிறது. இது முதல்முறை அல்ல, இதேபோன்று பல்வேறு சமயங்களில் சங்பரிவார் அமைப்புகள் ஒவ்வொரு தாக்குதலையும் அல்லது இறப்பையும் அரசியல் லாபமாக மாற்றுவதற்கு மத மோதலையோ அல்லது மற்றொரு வகையில் மோதலையோ தூண்டுவதற்கு முயற்சித்தே வந்திருக்கிறார்கள் என்பதை பார்க்க முடியும்.
கடந்த 2008 ஆம் ஆண்டு தென்காசியில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் குண்டு வைத்தவர்கள் இந்து முன்னணியினர் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் குண்டு வெடித்தவுடன் இரு சமூகங்களிடையே மிகப்பெரிய பதட்டம் அந்த நகரத்தில் உருவானது.
இதேபோன்று, 2017 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் சொந்தப் பிரச்சனைகளுக்காக அந்த நகரத்தின் பாஜக தலைவர் தாக்கப்பட்டதையொட்டி இஸ்லாமியர்கள் அவரை தாக்கிவிட்டு தொழுகை நடத்திவிட்டு சாவகாசமாக சென்றதாகவும் எச்.ராஜா பிரச்சாரம் செய்தார். பின்னர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தாக்கப்பட்டவர்களின் மதத்தைச் சார்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோன்று, அதே 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திருப்பூரில் தற்கொலை செய்து கொண்ட ஒருவரை மத மோதல் மற்றும் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டதாகவும் தமிழிசை சௌந்தர்ராஜன் அதை பெரிய பிரச்சனையாக மாற்றினார். பின்னர் அது சொந்த காரணங்களால் நடந்த தற்கொலை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி சாதாரண பிரச்சனைகள் எல்லாம் ஒரு பெரிய மத மோதலாக மாற்றுவதற்கு இவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய நோக்கம் தமிழ்நாட்டை வன்முறைக்குள் தள்ளுவதுதான்.
எனவே, இப்போது அவர்கள் சொன்ன விபரங்களையும், விசாரணைகளையும் வைத்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இது மத மாற்ற நிர்ப்பந்த மரணம் அல்ல என்று தெளிவுபடுத்தி இருக்கிறது.
எனவே, அப்போது இந்தப் பிரச்சனையை மத மோதல் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பாஜகவின் அப்போதைய மாநில தலைவர் அண்ணாமலையும், அந்த பிரச்சாரத்தை தொடர்ச்சியாக செய்து வந்த சங்பரிவார அமைப்புகளும் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
மத பகைமையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட பாஜகவின் அப்போதைய மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டு மக்கள் இத்தகைய வன்முறைக்கு தூண்டும் கூட்டத்திடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.
