அம்பேத்கரின் உருவப்படம், சிலைகள் நீதிமன்ற வளாகங்களில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் சிலைகள், உருவப்படங்கள் தவிர மற்ற தலைவர்களின் சிலைகள், உருவப்படங்களை நீக்க வேண்டும் என அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை, உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. நீதிமன்ற வளாகங்களில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், படங்கள், சிலைகள் வைக்க வேண்டுமென்று வழக்குரைஞர்கள் சங்கத்திடமிருந்து வந்த கோரிக்கைகள், பல இடங்களில் தேசியத் தலைவர்களின் உருவச்சிலைகள் சேதப்படுத்தப்பட்டது உள்ளிட்ட சட்டம் - ஒழுங்கு சிக்கல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நிலைபாட்டை உயர்நீதிமன்ற முழுமை அமர்வு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் டாக்டர் அம்பேத்கரின் உழைப்பும், பங்களிப்பும் அளப்பரியது என்பதை உலகமே அறியும். அவருடைய சிலை, உருவப்படத்தை நீதிமன்றங்களில் வைப்பதால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற கருத்து ஏற்புடையதாக இல்லை என்பதோடு, டாக்டர் அம்பேத்கர் படம் மற்றும் சிலைகளோடு இதர தலைவர்களது படங்களை ஒப்பீடு செய்வது எந்த விதத்திலும் பொருத்தமற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே, உயர்நீதிமன்ற பதிவாளர் இந்நடவடிக்கையை உடடினயாக திரும்பப் பெற வேண்டுமெனவும், அண்ணல் காந்தியடிகள், திருவள்ளுவர் ஆகியோருடன் டாக்டர் அம்பேத்கரின் சிலைகள், உருவப் படங்கள் நீதிமன்ற வளாகங்களில் இடம்பெறுவதை உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மேலும் தமிழ்நாடு அரசும் இப்பிரச்சனையில் தலையிட்டு டாக்டர் அம்பேத்கரின் உருவப்படம், சிலைகள் நீதிமன்ற வளாகங்களில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.