சென்னை, ஏப். 12-தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, நிர்வாகிகள் வி.பி.மணி, ஆர்.ராஜ்குமார், ஒய்.எட்வர்ட் ஆகியோர் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகுவை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவின் விவரம் வருமாறு:-தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 36ஆவது வணிகர் தின மாநில மாநாட்டை நடத்திட முடிவெடுத்து, அதற்கான ஆயத்தப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மாநாடு சம்பந்தமாக சுவர் விளம்பரங்கள், விளம்பரப் பதாகைகள், கொடி கம்பங்கள் பயன்படுத்தக்கூடிய நிர்ப்பந்தம் எங்கள் அமைப்புக்கு இருக்கிறது. ஏப்ரல் 18 அன்று தமிழகம் முழுவதும் தேர்தல் வாக்களிப்புமுடிவுக்கு வருகின்றது. ஆனால் அகில இந்திய அளவில் தேர்தலும், தேர்தல் முடிவுகளும் மே 23ஆம் தேதி முடிவுக்குவருகிறது. எங்களது அமைப்பு முழுக்க முழுக்க வணிகர் நலன் சார்ந்த அமைப்பாகவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலான அமைப்பு மட்டுமல்லாது எந்தவித அரசியல் சார்பும் அற்றது. எனவே, அரசியல் அமைப்புகளோடு எங்களை சம்பந்தப்படுத்தாமல், எங்களின் அமைப்புக்கு ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து நடத்திவரும் மாநில மாநாட்டினை எவ்வித இடையூறும் இன்றி நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் வாக்களிப்பு அனைத்தும் முடிவுற்றுள்ள நிலையில் தேர்தல் விதிகளை தளர்த்தி, எங்களின் சுவர் விளம்பரங்கள், பதாகைகள், மற்றும் கொடிகளை அகற்றிடாமலும், சேதப்படுத்தாமலும், உரிய அனுமதி அளித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.