புதுதில்லி, ஜூலை 26- அகில இந்திய அளவிலான மருத்துவக் கல்வி நிலையங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி. வில்சன் வலியுறுத்தினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் பூஜ்யம் நேரத்தில் பி.வில்சன் பேசியதாவது: மிகவும் முக்கியமான மாணவர்கள் பிரச்சனை குறித்து இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். அகில இந்திய நாடு முழுதும் உள்ள அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இளம் பட்டப்படிப்பு மற்றும் முது பட்டப்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட தமிழக மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி மற்றும் தளபதி எம்.கே. ஸ்டாலின் ஆகியோர் பிறந்த மண்ணிலிருந்து வந்தவன். இவர்கள் அனைவரும் சமூக நீதியுடன் சமத்துவ சமுதாயம் காண்பதற்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த மாபெரும் தலைவர்களாவார்கள். சமூக நீதியைப் பெறுவதற்கான கருவிகளில் ஒன்று, காலங்காலமாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு அளிப்பதாகும். அகில இந்திய இடஒதுக்கீடு என்பது வேறன்றுமில்லை. இந்திய மருத்துவக் கவுன்சில் வழிகாட்டுதலின்படி, பல்வேறு மாநிலங்களிலும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டக் காலியிடங்களை மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு சரண் செய்தவற்றின் மீது மேற்கொள்ளப்படுவதாகும். இளம் பட்டப்படிப்பு (under-graduate courses) வகுப்புகளுக்கு 15 சதவீத இடங்கள் சரண் செய்யப்படுகின்றன. முது பட்டப்படிப்பிற்கு (post graduate courses) 50 சதவீத இடங்கள் சரண் செய்யப்படுகின்றன. இவ்வாறு தனியார் கல்லூரிகள் மற்றும் அரசாங்கக் கல்லூரிகளில் ஏற்படும் காலியிடங்களுக்கு இவ்வாறு சரண் செய்யப்படுகின்றன. 2000ஆண்டு முது பட்ட மருத்துவக் கல்வி வரையறைசெய்யப்பட்ட விதிகள் 9(IV)-இன்படி, இட ஒதுக்கீடு என்பது அந்தந்த மாநிலங்களில் உள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி நடந்திடவேண்டும். தமிழ்நாட்டில் நாங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், பழங்குடியினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்றிருக்கிறோம். இதில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டைப் பெற்றிருக்கிறோம். இப்போது இந்தச் சட்டத்தில் ஓர் இடைவெளி காணப்படுகிறது. மத்திய அரசின்கீழான மருத்துவக் கல்லூரிகள் 2006ஆம் ஆண்டு மத்தியக் கல்வி நிறுவனங்கள் (நுழைவில் இடஒதுக்கீடு) சட்டத்தைப் பின்பற்றுகின்றன. இந்தச் சட்டத்தின்கீழ், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனினும், மத்திய சுகாதார அமைச்சகத்தின்கீழ் இயங்கிடும் மருத்துவ கவுன்சிலிங் குழு மாநிலங்களால் சரண் செய்யப்படும் இடங்களுக்கு மத்தியச் சட்டத்தின்படியான அகில இந்திய இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில்லை. அதேபோன்று, இவ்வாறு சரண் செய்யப்பட்ட இடங்களுக்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள சட்டங்களும் பின்பற்றப்படுவதில்லை. விளைவு, அனைத்து மாநிலங்களுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடுகளை இழந்து கொண்டிருக்கிறார்கள். இதனை இந்த அரசாங்கம் சரிசெய்திட வேண்டும். இவ்வாறு பி.வில்சன் வலியுறுத்தினார். (ந.நி.)