சென்னை:
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்க(சென்னை) நிர்வாகிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்கே.பாலகிருஷ்ணனை வெள்ளிக்கிழமையன்று சென்னையில் உள்ள மாநிலக்குழு அலுவலகத்தில் நேரில் சந்தித்து, 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
இதனைப் பெற்றுக் கொண்ட அவர் ,அரசுஉரிய நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும் என்று சங்க நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.மனுவின் விவரம் வருமாறு:வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக பணியும் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் உள்ள இயக்குனரகத்தில் உரிய குழுக்கள் அமைத்து, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஆண்டுதோறும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க உரிய ஆவன செய்ய வேண்டும்.குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பணியில் இருக்கும் பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது விதிமுறையாகும். இதை தனியார் பள்ளிகள் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் கல்விநிறுவனங்களில் பதவி உயர்வு வழங்குவதில் சாதி சமய வேறுபாடுகள் அதிகம் உள்ளதை அரசு உடனடியாக கலைந்து விடவேண்டும்.பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை போன்று சமமான ஊதியத்தை உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.எஸ். கருணாநிதி, செயலாளர் ஜெ. வெஸ்லி அட்சன், பொருளாளர் ஜான் அற்புதராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.