tamilnadu

img

அதிமுக எம்.பி சி.வி.சண்முகத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்!

சட்டமன்றத் தேர்தலில் ஆளுக்கொரு பொண்டாட்டி இலவசம் என பெண்களை அவமதித்து பேசிய அதிமுக எம்.பி சி.வி.சண்முகத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவர் பிரமிளா மற்றும் பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம்  “தேர்தல் நெருங்குது... அறிவிப்பு வரும்... ஆளுக்கொரு பொண்டாட்டி இலவசம்!” என தெரிவித்திருந்தார். அவரது இந்த பேச்சு பெண்களை இழிவுபடுத்தி அவர்களை “வாக்கு வாங்கும் பொருட்களாக” சித்தரிக்கும் மிகக் கடுமையான பெண்கள் விரோத கருத்தாகும்.
இது ஒரு நையாண்டி அல்ல. ஆணாதிக்க சமூக மனப்பான்மை உச்சபட்சவெளிப்பாடு பெண்களை சக மனுசியாக பார்க்காமல், ஒரு இலவச பொருளாக ,ஆண்களின் தேவைக்காக அரசியல் பரிசாக வழங்கப்படும் பொருளாக பேசி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இப்படிப்பட்ட கருத்துக்கள், சமூகத்தின் அடிப்படையான பெண்களின் மரியாதையையும் அரசியலின நெறிகளையும் மீறுவதாகும்.
பெண்களின் வாழ்க்கையை அரசியல் நகைச்சுவையாக மாற்றுகிறது. வாக்கு வங்கிகளுக்காக பெண்களின் மரியாதை ஒரு பரிமாற்றப் பொருளாகக் காட்டப்படுகிறது.
இதுபோன்ற கருத்துகள் சமூகத்தில் ஆணாதிக்கத்தை மட்டும் அல்ல, பெண் மீது நடக்கும் வன்முறைகளையும் நியாயப்படுத்தும் அடிப்படையாக மாறுகின்றன. ஒரு பெண்ணை ‘இலவச பரிசு’ போலச் சித்தரிக்கும் மொழி, பாலியல் வன்கொடுமை, திருமண வன்முறை போன்றவற்றுக்குப் பின்னால் நிற்கும் மனப்போக்கே ஆகும்.
மக்கள் பிரதிநிதி — பொதுமக்கள் முன்னிலையில் இத்தகைய கருத்தை வெளிப்படுத்துவது,அரசியலின் நெறி மீறல், பொறுப்பின்மையின் வெளிப்பாடு, பெண்களின் மரியாதையைப் பொது மேடையில் கேலி செய்வது.
இது பெண்களின் வாக்குரிமையையும், அரசியலில் அவர்களின் பங்களிப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
பெண்கள் இன்று கல்வியில், அரசியலில், பல்வேறு தொழிலில் முன்னேறியுள்ளனர். அவர்களின் உழைப்பும், போராட்டமும்  இந்த சமூகத்தை முன்னேற்றுகிறது. அத்தகைய சமூகத்தில் ஒரு பெண்ணின் மரியாதையை கேலி செய்வது,  பெண்களின்  சாதனையை அவமதிப்பதாகும்.
இத்தகைய பேச்சை வெளிப்படுத்திய சிவி சண்முகம் மீது   அதிமுக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்களை பொது மேடைகளில் அவமரியாதையாக பேசும் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது சட்ட ரீதியாக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.தேர்தல் ஆணையம், பெண்களை அவமதிக்கும் வகையிலான அரசியல் பேச்சுக்களுக்கு எதிராக தனிப்பட்ட வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்."
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.