tamilnadu

img

அதிமுக, பாஜக ஆட்சிகளின் வேதனை!

கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி மருத்துவர் ஏ. செல்லக்குமாரை களம் இறக்கியுள்ளது. தொகுதி முழுவதும் கூட்டணி கட்சியினர் பம்பரமாக சுழன்று தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். கூட்டணி கட்சித் தலைவர்களும் தேர்தல் பரப்புரை செய்து வருகின்றனர். வேட்பாளரும் மக்களை சந்தித்து வாக்குகள் கோரி வருகிறார்கள். 


விரட்டப்படும் ஆளும் கட்சி!


அதேசமயம், எதிர் அணி சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டவரும் கட்சியில் இருந்து ஓரங் கட்டப்பட்டவருமான கே.பி. முனுசாமிக்கு அதிமுகவினர் வாய்ப்பு கொடுத்துள்ளனர். முனுசாமியை சொந்த ஊர் மக்களே விரட்டியடித்தனர். இதுபோன்ற சம்பவம் பல்வேறு கிராமங்களில் அரங்கேறி வருவதால் அவர் மட்டுமல்ல, அக்கட்சித் தொண்டர்களும், கூட்டணிக் கட்சியினரும் ரொம்பவும் நொந்துபோய்விட்டனர்.அதிமுக வேட்பாளர் கே.பி. முனுசாமி, சொந்த ஊர் பக்கமே வந்ததில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், அமைச்சராக இருந்த காலத் தில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது இல்லை என்பதே தொகுதி முழுக்க மக்கள் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


வாயால் வடை சுட்ட பொன்னார்!


கிருஷ்ணகிரி மக்களவை மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதி மக்களின் நலன் காக்க அதிமுக, பாஜக ஆட்சிகள் செய்தது என்ன? கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஓசூர்-கிருஷ்ணகிரி ஜோலார்பேட்டை ரயில் பாதை திட்டம் கனவாகவே இருக்கிறது. இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ், ரயில் பயணிகள் சங்கம், ஹோஸ்டியா, ஓசூர் குடியிருப்போர் நல சங்ககள் கூட்டமைப்பு, சிஐடியு, வாலிபர், மாதர் சங்கங்கள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.கடந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு, பாஜகவின் மத்திய இணை அமைச்சர் பொன்னாரிடமும், மத்திய ரயில்வே அமைச்சரிடமும் தெற்கு கோட்ட ரயில்வே மேலாளரிடமும் பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரைக்கும் அந்த கோரிக்கையை நிறைவேற்றப் படாமலே உள்ளது.பொன். ராதா கிருஷ்ணனும், இந்த தொகுதியின் அதிமுக எம்பி அசோக்குமாரும், தற்போதைய வேட்பாளர் கே.பி.முனுசாமியும் நாங்கள் தலையிட்டு...இதோ முடித்து விடுகிறோம் என வாயாலேயே வடை சுட்டு... நாமம் போட்டுவிட்டு, இப்போது மீண்டும் நாங்கள் வந்தால் .. என பழைய பல்லவியை பாடி நாக்கு கூசாமல் வாக்கு கேட்கிறார்கள் ...  


கோபத்தில் மக்கள்!


மக்கள் மீதும், சிறு-குறு நடுத்தர தொழில்கள் மீதும், தொழிலா ளர்கள் மீதும் மோடி அரசு வீசிய வெடிகுண்டுகளாய் பண மதிப்பிழப்பு நடவடிக்கையாலும், ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிப்காட் தொழிற்பேட்டையில் 500-க்கும் மேற்பட்ட சிறு-குறுந் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. 60 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். கட்டுமானப் பணிகள் முற்றிலும் சீரழிந்துள்ளது. அதிமுக ஆட்சியில் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை-திண்டிவனம் சாலைப் பணிகள் 7 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் முடங்கியுள்ளது. இதற்கு காரணம், ரூ. 15 கோடிக்கு மேல் ஒப்பந்ததாரரிடம் கமிசன் கேட்டு வற்புறுத்தியும் கமிசன் கிடைக்காததால் அதிமுகவினரால் தான் இந்த சாலைப்பணிகள் முடக்கப் பட்டுள்ளது என மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை அதிமுகவினர் மறுக்கவில்லை.


வெற்று அறிப்புகள்!


பாம்பாற்றில் 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டத் துவங்கிய நீண்ட பாலமும் பாதியில் நிற்கிறது. ஒப்பந்தக்காரர் தலையில் துண்டு போட்டுக் கொண்டு ஓடியதுதான் மிச்சம். மறுபக்கம், ஓசூர் தர்கா ஏரியை சுத்ததம் செய்து தூர் வாரி மூன்று மாதத்துக்குள் படகு விட்டு, நடைபாதை அமைக்கப்படும், தேசிய நெடுஞ்சாலையில் ஓசூரில் பத்தளப்பள்ளி, மற்றும் சிப்காட் 1-ல் மேம்பாலம் உடனே ரெடி என உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த கே.பி.முனிசாமி கதை விட்டார். அவரைப்போன்றே அக் கட்சியின் மக்களவை உறுப்பினரான அசோக்குமாரும் மணல் கயிறு திரித்து ஐந்துஆண்டு கடந்து விட்டது. கடந்த மாதம் 5 நடை மேம்பாலம் ரெடி என மூக்கண்டப்பள்ளி பாரத் வங்கி முன்பு அடிக்கல் நாட்டிய, அசோக்குமாரும், நீதிமன்றத் தால் எம்எல்ஏ, அமைச்சர் பதவி இரண்டும் பிடுங்கப் பட்ட பாலகிருஷ்ணா ரெட்டியும் சேர்ந்து நட்ட அடிக்கல் கூட ஒரு சில நாட்களிலேயே காணாமல் போய்விட்டது.மாம்பழ கூழ், மாம்பழம் , பூக்கள், காய்கறிகள் புளி, விற்பனை மையம், குளிரூட்டும் மையம் அமைக்கப்படும் என அமைச்சராக இருந்தபோது கே.பி.முனிசாமியும், பாலகிருஷ்ணா ரெட்டியும், அசோக்குமாரும் சொன்னார்களே அதாவது வந்ததா? என்றால் இல்லை.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பையூரில் விவசாய ஆராய்ச்சி பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என 2011-ல் அதிமுக கொடுத்த வாக்குறுதியும் காற்றோடு போயாச்சு.. கிருஷ்ணகிரி அணையை சரியாக பராமரிக்காததால் மதகுகள் பழுதாகி சரி செய்தும் மீண்டும் பழுதாகி நிறைய நீர் வெளியேறி மீண்டும் பழுது பார்க்காமல் உள்ளது. கிருஷ்ணகிரி அணையின் பராமரிப்பும் பாதுகாப்பும் சைபர் என்றே கூறலாம். ஓசூருக்கு பாதாள சாக்கடை திட்டம் இதோ நடக்கப் போகிறது என்று சொல்லி 7 ஆண்டுகளாகிறது. திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலினால் உருவாக்கப் பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 8 ஆண்டுகளுக்குப் பின்னும் 30 சதம் மக்களுக்குக் கூட கிடைக்காமல் வேலைகளை முடக்கிப் போட்டதும் இதே அதிமுக மும்மூர்த்திகள்தான்.


250 மடங்கு வரியே வே(சா)தனை!


நகருக்குள் உள்கட்டமைப்பு வசதிகள், நகராட்சி ஊழியர்கள், சுகாதாரப் பணிகள், பணியாளர்கள் எண்ணிக்கையும் இன்னும் 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையிலேயே இருக்கும் நிலையில் ஓசூர் நகராட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் 100 ரூபாயாக இருந்த வரி இப்போது 4 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்த்தி விட்டனர்.இந்த வரி உயர்வை குறைப்பதற்கும் அதிமுகவின் மும்மூர்த்திகளான எம்பி அசோக்குமார், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் அமைச்சரும், இந்நாள் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.பி.முனுசாமி ஆகியோர் சிறிதும் அசைந்து கொடுக்காமல் சிலை போல இருப்பதால் 250 மடங்கு வரி உயர்வால் திண்டாடுகின்றனர்.ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கு கெலவரப் பள்ளி அணையிலிருந்து சுமார் 60 லட்சம் செலவில் தண்ணீர் கொண்டு வர குழாய் பதித்து திறப்பு விழா நடத்திய அன்று 3 மணி நேரம் மட்டும் ஏரிக்கு தண்ணீர் வந்ததோடு சரி. கடந்த இரண்டு ஆண்டுகளாக காற்று தான் வருகிறது.. 


ஏரியில் நீர் நிரப்பாதது ஏன்? 


நிலத்தில் பாதி கிணறு, கிணற்றில் பாதி சுவறு என்பது போல ஏரியை சுற்றிலும் நடைபாதை, ஏரிக்குள் சாலை அமைப்பது, ஏரியையொட்டி (ஏரிக்குள்) பெரிய பெரிய கட்டிடங்கள், என ஆளுங்கட்சி யினரே தன் கட்சிக்காரர்களுக்காக ஏரியைதிட்டமிட்டு சுறுக்குவதாக ஓசூர் பொதுமக்கள் பேசுகிறார்கள். இவ்வளவும் எம்பி, எம்எல்ஏ, அமைச்சர், நகராட்சித் தலைவர், என எல்லா பதவிகளிலும் ஆளுங்கட்சியினர் மட்டுமே இருந்தும் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. எனவே, இந்த முறை மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மருத்துவர் ஏ. செல்லகுமாரும், ஓசூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சத்யாவும் மிக எளிதில் வெற்றி பெறுவார்கள்.


-ஒய். சந்திரன்