சென்னை:
பெற்றோர்களுக்கு இனச்சான்று இருப்பின் அவர்களது பிள்ளைகளுக்கு சான்று வழங்கிட தமிழக அரசு ஏன் மறுக்கிறது? என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டில்லிபாபு அனுப்பியுள்ள மனுவின் விபரம்:
இனச்சான்று வழங்க மறுக்கும் கோட்டாட்சியர்கள் - சாராட்சியர்கள்
கடந்த 2010 அக்டோபர் 12,13 ஆகிய தேதிகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழுகூட்டத்தினையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் முடிவுகளை மாநிலத்தலைவரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நான், பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து 2 ஆண்டுகாலமாக காத்திருக்கும், இருளர், மலையாளி, காட்டுநாயக்கன், குருமன்ஸ், கொண்டாரெட்டீஸ் மற்றும்மலைக்குறவன், மலைவேடன் போன்றபழங்குடியின மக்களுக்கு விரைந்து இனச்சான்றிதழ் வழங்கிட வேண்டுமென மாநிலக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியதை மேற்கோள் காட்டி தினசரி நாளிதழில் பிரசுரித்த இயக்குநருக்கு (HC/2 Case No-3638) 05.06.2018 அனுப்பியுள்ள சம்மன்மீது பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஆஜரான உயர் அதிகாரியால் 17.12.2020 தேதியிட்ட Department of Tribal Welfare என்று தலைப்பிட்ட மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு அளித்திட்டபதில் அறிக்கையின் ஒரு நகலை 18.12.2020அன்று தங்கள் முன்னிலையில் பெற்றுக்கொண்டேன்.
பழங்குடியினர் நலத்துறை இயக்குநரின் கடிதத்தில் தமிழ்நாடு அரசு அரசாணை எண் 1773, 23.06.1984இன் படி 36 வகையான பழங்குடிகள் பட்டியலிடப்பட்டுள்ளது என்றும், எஸ்.டி., மக்கள்தொகை 7 லட்சத்து 95 ஆயிரம் அதாவது 1.1 சதமானம் மட்டுமே என்று குறிப்பிட்டுள்ள விபரமானது 10 ஆண்டுகளுக்கு முன்பான விபரமாகும். சமீபத்தில் இந்திய அரசின் பதிவாளர் / மத்திய அரசின் பழங்குடி யினர் அமைச்சகத்தின் சில பழங்குடி பிரிவுகளை இணைத்திட நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ள இத்தகைய விபரங்களை குறிப்பிட்டிருக்கலாம்.அவரது கடிதத்தின்படி 7 லட்சத்து 95 ஆயிரம் மக்களில் எவ்வளவு பேர்களுக்குஇதுவரை இனச்சான்று வழங்கப்பட்டுள் ளது. விபரம் இல்லை.
ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தில் ஆதிதிராவிட (ம) பழங்குடியினர் நலத்துறையின் மானிய கோரிக்கையின் போது அரசின் சார்பில் ஆதிதிராவிட (ம) பழங்குடி நலத்துறை அமைச்சர் தெரிவிக்கின்றார். அதன்படி 36 வகையான பழங்குடியினர் பிரிவுகளில் எந்தெந்த பிரிவினருக்கு எத்தனை ஆயிரம் இனச்சான்று வழங்கப்பட்டுள்ளது என்ற விபர அறிக்கையை இயக்குநர் சமர்ப்பித்திடவில்லை.மேலும் உச்சநீதிமன்றம் 2002 ஆம்ஆண்டுகளில் (ம) 2011 ஆம் ஆண்டு
களில் பெற்றோர்களுக்கு இனச்சான்றுஇருப்பின் அவர்களது பிள்ளைகளுக்கு இனச்சான்றிதழ் வழங்கிட வேண்டும் என்றும், இரத்த பிரிவு உறவுகளை கணக்கிட்டும் பழங்குடிகளுக்கு இனச்சான்றி தழ்களை வழங்கிட வேண்டும் என அசாம்மாநிலத்தில் “கோண்ட்” என்ற பழங்குடியினருக்கான சாதிச்சான்றிதழ் வழங்கிடும்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை போல் ஏன்தமிழகத்தில், பெற்றோர்களுக்கு இனச்சான்று இருப்பின் அவர்களது பிள்ளைகளுக்கு வழங்கிட ஏன் சாராட்சியர்/ வருவாய் கோட்டாட்சியர்கள் மறுக்கிறார்கள். சில இடங்களில் விதிவிலக்காக கூடஇருக்கலாம்.
இரண்டாவதாக தமிழகத்தில் 79 வருவாய் கோட்டாட்சியர் / சாராட்சியர் களுக்கு 4 மண்டலங்களாக பிரித்து, இனச்சான்றிதழ் வழங்கிட, இயக்குநரால் பயிற்சி அளிக்கப்பட்டதும், இறுதியாக 17.5.2018 தேதியன்று தலைமைச் செயலாளர், காணொலி மூலமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும், இதற்கான எஸ்.டி. சாதிச்சான்றிதழ் வழங்கி, அதிகமாக, தேங்கியுள்ள மனுதாரர்களின் வழக்குகளை முடித்திட வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.அப்படியானால் 23.2.2018 முதல் இன்று வரை எத்தனை வருவாய் கோட்டாட்சியர்கள் / சாராட்சியர்கள் எவ்வளவு இனச்சான்று வழங்கியுள்ளனர் என்பதைஏன் இயக்குநரால், விபரம் அளிக்க முடியவில்லை?சில மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறப்பட்ட விபரங்களில் எத்தனை பழங்குடி மக்களுக்கு இனச்சான்றுகள் கிடைக்கப்பட்டுள்ள என்ற விபரத்தையும் - அளித்திடவேண்டுகிறேன்.
******************
சுதந்திரம் அடைந்தும் உரிமைகள் கிடைக்காத மக்கள்
கடந்த 18.2.2009 அன்று முதன்மைச் செயலாளர்/ வருவாய் நிர்வாக ஆணையர் முனைவர் ந. சுந்தரதேவனிடம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கிட மறுக்கிறார்கள் என்று எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளித்திருந்தேன்.அம்மனுவை பெற்ற பின்பு வ.நி.5(3) 13276/2009 நாள் 25.02.2009, 15.02.2010 மற்றும் 27.07.2010 ஆகிய தேதிகளில் வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை மூலம் மதுரை/ சேலம்/ வேலூர் உட்பட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் (ம) பழங்குடி நல அலுவலர் அவர்களது கடிதத்தின் படி (7.12.2010) பெற்றோர்கள் சாதிச்சான்று பெற்றிருப்பின் உடனடியாக பிள்ளைகளுக்கு சாதிச்சான்று வழங்கிட வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு சட்டமன்றத்தில் பதிவு செய்து அதனடிப்படையில் முதன்மைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், சேப்பாக்கம், சென்னை - 5 வ.15.5.(3)/ 13276/ 2009 நாள் 15.02.2010 நாளிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளார் என்று எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்டதை காண்பித்த பின்னரும் இன்றைக்கு திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர், திண்டுக்கல் கோட்டாட்சியர், அருப்புக்கோட்டை போன்ற வருவாய் கோட்டாட்சியர், காட்டுநாயக்கன், மலைவேடன் தேவராஜன் இன பழங்குடி மக்களுக்கு இனச்சான்று வழங்கிட மறுக்கிறார்கள்.
சென்ற 2016 ஆம் வருடத்தில் அன்றைய மாவட்ட ஆட்சியரே நேரடியாக ஸ்தலத்திற்கே சென்று விசாரணை செய்து முடித்தும் நிலுவையில் 5 ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அதேப் போல், மலைவேடன் பழங்குடியினர், சாதிச்சான்றிதழ் வழங்குவது குறித்து – திண்டுக்கல் மாவட்ட இம்மக்களது உரிமைகள் இன்று வரை பறிக்கப்பட்டு வருகிறது. அடுக்கிய மூட்டையில் அடி மூட்டை என்பார்களே, அவர்கள் இப்பழங்குடி மக்கள்தான். நாடு சுதந்திரமடைந்தும், 72 ஆண்டுகளான பின்னரும் பிறந்த இனத்திற்கான இனச்சான்றிதழ் வழங்கிடாமல் இப்பழங்குடி மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றது.
மத்திய, மாநில அரசுகள் உத்தரவுகள், ஆணைகள் மற்றும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மனித உரிமைகள் ஆணையம் இவையெல்லாம் உத்தரவுகள் பிறப்பித்தும், திட்டமிட்டே தமிழகத்தில் சில மாவட்டங்களில் சாதிச்சான்றிதழ் வழங்கப்படும் அதிகாரம் படைத்த அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவதும் அவர்களுக்கான மனித உரிமைகள் பறிக்கப்படுவதும் தொடர்கின்றது.இவ்வழக்கின் மூலமாவது அடித்தட்டு மக்களான பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் அரசின் ஆணைப்படி கிடைத்திட தாங்கள் நீதி வழங்க வேண்டும்.