சென்னை:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாம் வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாநில ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை முதலமைச்சர் தாக்கல் செய்தார்.அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ”மிக முக்கிய அமைப்பான பட்டியலின பழங்குடியின ஆணையம் அமைக்க திமுக அரசு முடிவு செய்துள் ளது” என்றார்.தொடர்ந்து பேசிய முதலமைச்சர், பட்டியல் இன மக்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தி பழங்குடியினர் மக்களுக்கு ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடும் அருந்ததியின மக்களுக்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது திமுக அரசு.
பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு திமுக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. அனைத்து சமய மக்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதற்காக தான் பெரியார் சமத்துவபுரம் உங்களை உருவாக்கியது.வரலாற்றின் தொடர்ச்சியாக இப்போது பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையம் அமைப்பதற்கு இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் நலன் களைப் பாதுகாக்க மற்றும் அவர்களின் பொருளாதார மற்றும் சமூக நல்வாழ்வை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இந்த நோக்கத்திற்காக தேவைப்படும் அத்தகைய அதிகாரங்கள் மற்றும் பணிகள் உடன் ஓர் ஆணையத்தை அமைப்பதற்காக அரசு முடிவு செய்துள்ளதாக அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த அவர்கள் தொடர்பான சிறந்த அறிவு கொண்டுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைவராக இருப்பார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்களுக்காக பணியாற்றிய அந்த இனத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவர் துணைத் தலைவராகவும் இருப்பார்.ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள், பழங்குடியினர் ஒருவர், இந்த இரண்டு இனத்தையும் சேர்ந்த சிறந்த அறிவு கொண்டுள்ள ஒருவர் என 5 உறுப்பினர்கள் உள்ளடங்கியதாக இந்த ஆணையம் அமைக்கப்படுகிறது.மேலும் இதில் கட்டாயம் ஒரு பெண் இடம் பெறுவார். அரசு கூடுதல் செயலாளரின் படிநிலைக்கு குறையாத இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களில் அரசால் பணி அமர்த்தப்பட்ட உறுப்பினர் ஒருவரும் செயலாளராக இருப்பார் என்றும் மசோதாவில் கூறப் பட்டுள்ளது.ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். தலைவர் 70 வயது நிறைந்தவராகவும், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 65 வயது நிறைந்தவராகவும் இருப்பார்கள்.மேலும், இந்த ஆணையம் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் தேவைப்படும் பொழுதும் கூட வேண்டும். ஆணையம் அதன் சொந்த செயல்முறையை ஒழுங்குபடுத்த வேண்டும் உள்ளிட்ட ஏராளமான சரத்துகள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன.