tamilnadu

img

மத்திய அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.... பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சாடல்....

சென்னை:
கல்விக் கொள்கையில் மத்திய அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான நடவடிக்கை என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மாநில உரிமை காக்க, கல்வி உரிமை மீட்க, தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.மத்திய அரசின் கல்வி அமைச்சர் நேரடியாக ஒரு கொள்கை முடிவை நடைமுறைப்படுத்த மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறை செயலாளர்களிடம் ஆலோசனை நடத்துவது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட் சித் தத்துவத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமையை மத்திய அரசு தட்டிப் பறிக்கப் பார்க்கிறது. இது மாநில அரசைத் தேர்ந்தெடுத்த மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகும்.   அத்தகைய கூட்டத் தில் பங்கேற்பதில்லை என்ற தமிழக அரசின் முடிவு மாநில உரிமை காக்கும் போராட்டத் தின் முதல் படி. அரசின் இந்த முடிவை வரவேற்பதுடன், அரசின் இந்த நடவடிக்கையைப் பிற மாநில அரசுகளும் பின்பற்றி இந்திய அரசமைப்புச் சட்டம் வகுத்தளித் துள்ள மக்களாட்சி மாண்புகளையும், கூட் டாட்சித் தத்துவத்தையும் உயர்த்திப் பிடிக்க தமிழக அரசுடன் கைகோர்க்க  வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பள்ளிக் கல்வி ஆணையர் பணியிடம் 2019இல் உருவாக்கப்பட்ட போதே பள்ளிக் கல்வித் துறையில் அத்தகைய பணியிடம் தேவையற்றது என்ற கருத்தைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தெரிவித்தது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தேவையற்ற பணியிடங்களை நீக்கி விட்டு, பள்ளிகளில் கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை உருவாக்கி, சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் வழங்கிடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்த்தோம்.எதிர்பார்ப்பிற்கு மாறாக, பள்ளிக் கல்வி இயக்குநர் பணி வகித்தவரை இடம் மாற்றி, அந்தப் பணியிடத்தை இந்திய ஆட்சிப் பணி அலுவலர் வகிக்கும் பணியிடமாக மாற்றிடும் வகையில் பள்ளிக் கல்வி ஆணையர், பள்ளிக் கல்வி இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார்.

இன்று வரை, கல்வியியல் செயல்பாடு கொண்டவரையே தமிழக அரசு, பள்ளிக் கல்வி இயக்குநர் பணியில் நியமித்துள்ளது. தற்போது ஒன்றிய அரசு ஒட்டுமொத்தக் கல்வித் துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயலும் சூழலில், ஆட்சிப் பணி அலுவலர் ஒருவரைப் பள்ளிக் கல்வி இயக்குநர் பொறுப்பில் நியமிப்பது, தமிழ் நாட்டின் தனித்தன்மையை இழக்கச் செய்யும். எந்த மாநிலத்தைச் சார்ந்தவரும் எதிர் காலத்தில் இப்பணியில் அமர்த்தப்படலாம். அத்தகைய நிலை உருவாக வழி செய்வது நியாயமான அணுகுமுறை அல்ல.இயக்குநர் பணி நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தேவையற்ற விவாதமாக மாறி கல்வியை மாநிலப் பட்டியலுக்குத் திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற நமது அடிப் படை கோரிக்கையில் இருந்து திசை மாற அனுமதிக்கக் கூடாது.இந்தியாவிற்கே முன்னுதாரணமாகத் திகழும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கிட மாநிலக் கல்வி ஆணையத்தை அமைத்திட முதல்வர் விரைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.