tamilnadu

img

கொரோனா பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் செயல்படுக... திமுக நடத்திய அனைத்துக்கட்சி கூட்டம் வலியுறுத்தல்

சென்னை:
நகரங்களிலும் கிராமங்களிலும் வேகமாக பரவும் கொரோனா நோய்த்தொற்றை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படவேண்டும் என்று திமுக நடத்திய அனைத்துக்கட்சி கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கே.எஸ். அழகிரி (காங்), கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம்) இரா.முத்தரசன் (சிபிஐ), வைகோ (மதிமுக) காதர் மொய்தீன் (முஸ்லீம் லீக்) திருமாவளவன் (வி.சி.க) ஜவாஹிருல்லா (மமக),பாரிவேந்தர் (தமிழக ஜனநாயக கட்சி) உள்ளிட்ட தோழமை கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள் வருமாறு:
தொடக்கத்திலிருந்தே, முதலமைச்சரிடமும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமும், கொரோனா பெருநோய்த் தொற்று பரவல் குறித்து வெளியிடுவதிலும் சொல்வதிலும் ஒரு வகையான தயக்கம் நீடித்து வருகிறது; மருத்துவ விஞ்ஞானிகள் பலரும் சமூகப் பரவல் என்று கருத்து அறிவித்ததற்குப் பிறகும் அதை ஏற்றுக் கொள்வதிலே தடுமாற்றம் காணப்படுகின்றது. அதனால், சரியான தரவுகளே முறையான திட்டமிடலுக்கும், சிகிச்சைக்கும் அடிப்படை என்பதை மறந்து, கொரோனாவின் ஒவ்வொரு படிநிலையிலும் எண்ணிக்கைகளைக் குறைப்பதும் மறைப்பதுமான செயல்களில் ஈடுபட்டு, குழப்பங்களையும் குளறுபடிகளையும் உருவாக்கி வருகின்றனர்.

மர்ம முடிச்சு
மருத்துவமனை வசதிகள், மருத்துவப் படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர்களில் இருப்பவர்கள், நோய்த் தொற்றுக்கு உள்ளானோர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் அனைவரின் கணக்கிலுமே அ.தி.மு.க. அரசிடம் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மை இல்லை; எல்லா நடவடிக்கைகளுமே ஒரு மர்ம முடிச்சுக்குள் சுருண்டு கிடக்கிறது என்பதை இந்தக் கூட்டம் பேரதிர்ச்சியுடன் பதிவு செய்து- நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு 31.7.2020 அன்று நிறைவடையும் நிலையில், இப்போதாவது, தீயாய்ப் பரவிவரும் கொரோனா நோய்த் தொற்றில் மிகுந்த தீவிரத்துடனும்- அதிக அக்கறையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு- மக்களை இந்த நோய்ப் பேரிடரிலிருந்து பாதுகாத்திட- குறிப்பாக மாவட்டங்களிலும் கிராமங்களிலும் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும்.

பலியானோர் பட்டியலை வெளியிடுக
 கொரோனா பணியில் உயிர்த் தியாகம் செய்த முன்கள வீரர்களுக்கு, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், நேர்ந்துவிட்ட இழப்பினால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், உயிர்த் தியாகம் செய்தோரின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு - அவர்களுக்காக அறிவிக்கப்பட்ட நிதியை மேலும் தாமதப்படுத்தாமல் வழங்கிட வேண்டும் என்றும், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் உரிய அடிப்படை பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

நிவாரணம் வழங்குக
விவசாயத் தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், தெருவோரக் கடை வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு விரக்தியின் விளிம்பிலே நிற்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு இழந்து விட்ட வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் மீட்டிட-  மத்திய மாநில அரசுகள் ரொக்கமாக நிதியுதவி உடனடியாக அளித்திட வேண்டும் என்றும்; தவறாகக் கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை ரத்து செய்து மீதித்தொகையினை, எளிய தவணைகளில் செலுத்துவதற்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்திட வேண்டும் என்றும்; ஏழை எளியோர் கையில் கொடுக்கப்படும் நிவாரணப் பணம் அவர்களுக்கு வாங்கும் சக்தியை உருவாக்கி, பொருளாதார சுழற்சிக்கு உதவிடும் என்பதை உணர வேண்டும்.

கண்டனம்
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்று ஏழு மாதங்களுக்கு மேலாகியும்- ஊராட்சி மன்றத் தலைவர்களின் அதிகாரங்களைப் பறிக்கும் விதத்திலும்- நிதி ஒதுக்காமல் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கும் விதத்திலும் ஜனநாயக விரோதச் செயலில் ஈடுபட்டு வரும் அ.தி.மு.க. அரசுக்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பறிக்கும் செயலைக் கைவிட்டு - கிராமங்களில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மக்கள் நலத்திட்டங்களைத் தடையின்றி நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை அனைத்து உள்ளாட்சி மன்றங்களுக்கும் உடனடியாக ஒதுக்கிட வேண்டும் என்றும், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தும் முழு அதிகாரத்தையும் ஊராட்சி மன்றங்களுக்கே அளித்திட வேண்டும்.

மதவெறியர்களுக்கு கண்டனம்
சமூகநீதியின் சுடர் விளக்காக தமிழக மக்கள் மனதில் என்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கும் தந்தை பெரியார் சிலைக்கு “காவி பூசுவது”; சாதாரண சாமானிய உழைக்கும் மக்களுக்காக சித்தாந்த ரீதியாகப் போராடி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தையே அசிங்கப்படுத்துவது; அரசியல் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்துவது போன்ற சம்பவங்கள் அ.தி.மு.க. அரசின் அனுசரணையோடு அரங்கேறுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்தப் பிரச்சனைகளிலிருந்து பொது கவனத்தை திசை திருப்பும் நோக்கில், மதவெறியைத் தூண்டும் பொய்ப் பிரச்சாரங்களிலும், காரியங்களிலும் இறங்குகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக விவகாரத்திற்குக் காரணமான கயவர்கள் மீது புகார் அளித்தும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு - “குள்ளநரி” எண்ணம் கொண்ட அந்தக் கூட்டத்தைக் காப்பாற்றும் போக்கில் அ.தி.மு.க. அரசு செயல்படுவதற்கும்; இதுபோன்ற தரம் தாழ்ந்த - ஆரோக்கியமற்ற – தனி நபர் விமர்சனங்களை திரைமறைவிலிருந்து இயக்கி, நல்லிணக்கத்தைப் பாழ்படுத்தும் பா.ஜ.க.விற்கும் இந்தக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய அரசுக்குக் கோரிக்கை
சமூகநீதியை நிலைநாட்டிட தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மட்டுமின்றி- அகில இந்திய அளவில் உள்ள அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம், “பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு மருத்துவக் கல்வி இடங்களில் 50 சதவீத இடங்களையும், பட்டியலின மக்களுக்கு 18 சதவீத இடங்களையும் வழங்கிட வேண்டும்” என்றும், க்ரீமிலேயர் வருமானத்தில் "நிகர சம்பளத்தை" எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மத்திய அரசாணைகளின்படி அறிவித்துள்ள இடஒதுக்கீடு சதவீதங்களை முழுமையாகச் செயல்படுத்திட தனியாக கண்காணிப்பு அமைப்பு ஒன்றினை உருவாக்கிட வேண்டும் என்றும் மத்திய பா.ஜ.க. அரசை, அனைத்துக் கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் - சமூகநீதி பிறந்து தவழ்ந்து வளர்ந்த பெருமைக்குரிய தமிழ் மண்ணிலிருந்து கேட்டுக் கொள்கிறது.

ஜனநாயக விரோதமான அறிக்கை
“பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டங்களை” பலவீனப்படுத்தியும், “மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்குழுவிற்கு மத்திய அரசே தலைவர் உறுப்பினர்களை நியமிக்க வழி செய்தும்” - கொண்டு வரப்பட்டுள்ள மாநில உரிமைகளுக்கு விரோதமான- ஜனநாயக விரோதமான சுற்றுப்புறச்சூழல் தாக்க அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. நாடாளுமன்றம் கூடிய பிறகு ஏற்கனவே உள்ள “2006 சுற்றுப்புறச்சூழல் தாக்க அறிவிக்கை 2006”யை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் - நாட்டில் உள்ள இயற்கை வளங்களையும், மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாத்திடும் வகையிலும் மட்டுமே மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு
மாநிலங்கள் "மத்தியத் தொகுப்பிற்கு" ஒப்படைக்கும் மருத்துவக் கல்விக்கான (எம்.பி.பி.எஸ்; பி.டி.எஸ், முதுநிலை மருத்துவம்) இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இடஒதுக்கீடு பெறும் அரசியல் சட்ட உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, சமூகநீதி அத்தியாயத்தில் மிக முக்கியமாகவும், சமூகநீதியை நிலை நாட்டுவதில் எப்போதுமே ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் முன்னணியில் நிற்கும் என்பதற்கும் மற்றுமொரு சான்றாகும்.  இந்தச் சமூகநீதிப் போராட்டத்தை நடத்தி பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் உரிமையை நிலைநாட்டியுள்ள திமுக  உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் இந்தக் கூட்டம் தனது பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

வலியுறுத்தல்
 "இடஒதுக்கீடு அளிக்க முடியாது" என்ற மத்திய அரசின் வாதத்தை நிராகரித்து, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கமிட்டி அமைத்து முடிவெடுக்க வேண்டும் என்ற மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவினை ஏற்று- நீதிமன்றம் அளித்துள்ள  மூன்று மாத காலம்வரை காத்திராமல் உடனடியாக ஒரு கமிட்டியை அமைத்து,  உரிய முடிவெடுத்து மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இந்தக் கல்வி ஆண்டிலேயே தமிழ்நாடு மத்தியத் தொகுப்பிற்கு ஒதுக்கும் இடங்களில் தமிழக அரசு சட்டப்படி பின்பற்றிவரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டையும், பட்டியலின மக்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீட்டையும்- பழங்குடியின மக்களுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீட்டையும் வழங்கிட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசை  இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம்  வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அந்த தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது.

ஊடக பாதுகாப்பு குழு

பா.ஜ.க. - அ.தி.மு.க.வின் கட்டளைகளுக்குப் பணிந்து, நடுநிலையைக் காவுகொடுக்கும் ஊடகங்கள், காலப் போக்கில் இருந்த இடம் தெரியாமல் மங்கி மறைந்துவிடும். அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்சி’, கருத்துத் தணிக்கை காலகட்டத்திற்கு தமிழகத்தைப் பின்னோக்கி இழுக்க நினைப்பது, எள்ளளவும் பலிக்காது. அப்படியே பா.ஜ.க. - அ.தி.மு.க.வின் அழுத்தம், அச்சுறுத்தல், ஆசை காட்டுதல் ஆகியவற்றிற்குப்  பயந்து, பணிந்து, ஜனநாயக நெறிகளையும், கருத்துச் சுதந்திரத்தையும், நடுநிலையையும்; ஊடகங்கள், இரண்டாம்பட்சமாகக் கருதி, பின்னிடத்திற்குத் தள்ளும் கடினமான முடிவை மேற்கொள்ளுமானால், தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சிகள் அனைத்தும் அத்தகைய ஊடகங்களின் நிகழ்வுகளில் பங்கேற்காமல் புறக்கணித்திட வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படும்.ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள்; மக்கள் குரலே மகேசன் குரல்! மகத்தான அந்தக் குரலை, அச்சு - காட்சி ஊடகங்கள் மீது அதிகாரம் செலுத்திக் கட்டுப்படுத்துவதன் மூலம், நெரிக்க நினைப்பது, மீள முடியாத கொடுந்தீமையில் வீழ்த்திவிடும். ஆகவே கருத்துச் சுதந்திரத்தை முறையாகப் பேணிப் பாதுகாத்திட, அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழு ஒன்றினை அமைத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.இந்தக் குழுவில் பேரா.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக), கோபண்ணா (காங்), மல்லை சத்யா (மதிமுக), க.கனகராஜ் (சிபிஎம்), சி.மகேந்திரன் (சிபிஐ), ரவிக்குமார், எம்.பி (வி.சி.க), அப்துல் ரஹ்மான் (மு.லீக்), அப்துல் சமர் (மமக), சூர்யமூர்த்தி (கொங்குநாடு மக்கள் கட்சி), ஜெயசீலன் (இந்திய ஜனநாயக கட்சி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.