tamilnadu

img

88 ஆண்டுகள் பழமையான ரயில்வே பாலம் இடிப்பு

சென்னை, மே 10- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த 88 ஆண்டுகள் பழமையான யானை கவுனி பாலம் இடிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில், வால்டாக்ஸ் சாலையையும், ராஜா முத்தையா சாலையையும் இணைக்கும் வகையில் அமைந்திருந்த யானை கவுனி பாலம், 1932ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். ஜார்ஜ் டவுன் பகுதியில் முக்கியப் பகுதிகளை இணைக்கும் பாலமாக இருந்துவந்த இப்பாலம், திட்டமிடப்பட்ட காலத்தையும் தாண்டி நீண்ட நாட்களாக செயல்பாட்டில் இருந்து வந்தது. இருப்பினும், காலப்போக்கில் வழுவிழந்த இப்பாலத்தால், சென்ட்ரல் ரயில் நிலைய விரிவாக்கப் பணியும் தடைப்பட்டது. இந்நிலையில், யானை கவுனி பாலத்தை இடிக்க தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், பாலத்தில் இருந்த மின்சார கேபிள்களால் இடிக்கும் பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதற்காக 2 நாட்களுக்கு ரயில் போக்குவரத்தை நிறுத்தும் சூழல் ஏற்படும். அதேபோல், புறநகர் ரயில் சேவையை 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டி வரும் என்பதால், இந்தப் பணி தாமதமானது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி யானை கவுனி பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, தென்னக ரயில்வே நிர்வாகம், தமிழ்நாடு அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிக ளுடன் இணைந்து, பால இடிப்புப்பணியில் ஈடுபடத் தொடங்கியது. ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கிய இப்பணி மே 8ஆம் தேதி முடிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் பாகங்கள் டைமன்ட் வையர் சா கட்டர், ஜேசிபி, கிரேன், ஜெனரேட்டர் போன்ற இயந்திரங்கள் மூலமாக தனித்தனியாக பெயர்த்து எடுக்கப்பட்டன. அடுத்தக்கட்டமாக புதிய பாலம் ஒன்றை கட்ட தென்னக ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.