tamilnadu

img

6 லட்சம் பணியிடங்கள் காலி... நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக்கட்ட மோடி அரசு சதி

சென்னை:
மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் நிரந்தர தொழிலாளர்களை ஒழித்துக்கட்டி தனியார்மயமாக்கும் வகையில் ஒப்பந்த பணிகளைஅரசு அதிகப்படுத்தியுள்ளதாக சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன்  குற்றம்சாட்டினார். காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங் களை நிரப்ப வேண்டும், ரயில்வே, பாதுகாப்பு,தபால், தொலைபேசி உள்ளிட்ட துறைகளை தனியாரிடம் வழங்கக் கூடாது, புதிய ஓய்வூதியதிட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் தர்ணா போராட்டம் செவ்வாயன்று (அக். 15) நடைபெற்றது. அதன்ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தபால் கணக்கு சங்க மாநிலச் செயலாளர்ஆர்.பி.சுரேஷ் தலைமையில் தர்ணா நடைபெற்றது.இதில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கலந்து கொண்டு பேசியதாவது:

பிரிட்டன் அனுபவம் என்ன?
மத்திய அரசு ஊழியர்களின் நலத்திட்ட செலவுகளை குறைத்து, அந்த நிதியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க மத்தியஅரசு முயற்சிக்கிறது. அதன் ஒருபகுதிதான் ஓய்வூதியம் இல்லை என்பது. அரசு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை தனியாரிடம் ஒப்படைத்து பணம் வசூலிக்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்கின்றன.பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் தனியார்மயமாக்கப்பட்ட அனைத்து பொதுத் துறைநிறுவனங்களையும் மீண்டும் அரசுடைமை யாக்க வேண்டும் எனப் போராடி வருகிறார் கள். ஆனால் மத்திய பாஜக அரசு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாரிடம் தாரைவார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. கடந்த காலங்களில் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங் களின் மூலம் பொதுத்துறையை பாதுகாத்துவந்தோம். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என சட்டம் கூறுகிறது. ஆனால் மோடிஅரசு சட்டங்களைத் திருத்தி பாதுகாப்புத் துறைஉள்ளிட்ட அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும், அதன் சொத்துக்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரைவார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

நிரந்தர தொழிலாளர்களை ஒழித்துக்கட்ட சதி
நிரந்தர தொழிலாளர்களை ஒழித்துக்கட்டி ஒப்பந்த தொழிலாளர்கள் மூலமும், அவுட்சோர்சிங் மூலமும் பணிகளை முடிக்கநினைக்கிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர் களுக்கு எந்த சமூகப் பாதுகாப்பும் கிடையாது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பணத்தை வாரி வழங்குவதால் தொழில் வளர்ச்சி ஏற்படாது. சாதாரண மக்களிடம் பணம் இருந்தால்தான் தொழில் வளர்ச்சி ஏற்படும். எனவே நாம் ஒப்பந்த தொழிலாளர்களையும் திரட்டி, வேலை நிறுத்தம் உள்ளிட்ட உறுதியான போராட்டத்தின் மூலம் பொதுத் துறையை பாதுகாக்க வேண்டியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டால்தான் சமூக நீதியும், இடஒதுக்கீடும் பாதுகாக்கப்படும் என்றார்.

சமூகப் பாதுகாப்பு இல்லை
தொமுச பொருளாளர் நடராஜன் பேசுகையில், தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கும், அரசுத் துறையிலேயே ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரிபவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு இல்லை. கவுரவமான வேலை இல்லை. கிராமப்புறங்களில் தபால், பணம் பட்டுவாடா செய்யும் தபால்காரருக்கு பணி பாதுகாப்பு இல்லை. அவரை பணியாளராகக் கூட அரசு அங்கீகரிக்க மறுக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. கொடூரமான சட்டங்களை கொண்டு வந்து உழைப்பாளி மக்களை ஒடுக்க நினைக்கிறது மத்திய பாஜகஅரசு. அதற்கு மாநில அரசும் துணைபோகிறது. 

40 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்
நாட்டின் நவரத்தினங்களாக கருதப்படும் நிறுவனங்களை அந்நிய நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தாரைவார்க்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. ரயில்வே தனியார்மயமானால் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ரயிலில் பயணம் செய்ய முடியுமா? விமான நிலையங்களில் கூட தனியார்விமானங்கள் இயக்க வாடகை வசூல் செய்யப்படுகிறது. ஆனால் நம்முடைய வரிப் பணத்தில்உருவான தண்டவாளங்கள், நடை மேடையை எந்த வாடகையும் இன்றி தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதி அளித்திருப்பது எந்தவிதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினார். ரயில்வே தனியார்மயமானால் 40 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது என்றும் கூறினார். 

மக்கள் சொத்து 
ஏஐடியுசி பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி பேசுகையில், தொழிலாளர்களின் உழைப்பால்தான் நாட்டின் செல்வ வளங்கள் உற்பத்தி செய்யப்பட்டன என்பதை மறைத்து,கார்ப்பரேட் நிறுவனங்களால்தான் நாட்டின்செல்வ வளங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள் ளன என மோடி கூறுகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபடுகிறது. அதனால்தான் ரிசர்வ் வங்கியில் இருந்து 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து கார்ப்பரேட் நிறுவங்களுக்கு வாரி வழங்கியுள்ளனர். இதனால் புதிய வேலை வாய்ப்பு பெருகியுள்ளதா என்றால் இல்லை. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. உண்மையை மடைமாற்றம் செய்யும் வேலையில் பாஜக ஈடுபட்டு வருகிறது. பொதுத் துறை நிறுவனங்கள் மக்கள் சொத்து என்பதை எளிய மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

8 மணி நேர வேலை என்பது, இனி 10 மணி நேரமாகவோ, 12 மணி நேரமாகவோ மாற்றப்படும். நம்முடைய ஏழ்மையையும், வறுமையையும், கனவையும் பயன்படுத்தி ஆட்சியாளர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள். மத்திய அரசுஊழியர், மாநில அரசு ஊழியர், ஆலைத் தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும்உழைப்பாளி என்ற அடிப்படையில் ஒன்றி ணைந்து இந்த எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக போராட முன் வர வேண்டும் என்றார்.கோரிக்கைகளை விளக்கி பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன், பொருளாளர் எம்.எஸ்.வெங்கடேசன், வருமான வரி ஊழியர்கள் சங்க நிர்வாகி சுந்தரமூர்த்தி, தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் நிர்வாகிகள் கண்ணன்,வீரமணி. காமராஜ் (சாஸ்திரி பவன்), மீராபாய்(வருமான வரித் துறை), பஷீர் (ஏஜிஎஸ்), தனஞ்செயன், முருகராஜ் (கல்பாக்கம் அனுமின் நிலையம்) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள்.