சென்னை:
முதல்வர் பழனிசாமி புதனன்று தலைமைச் செயலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 154 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 500 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு வருமாறு:
தமிழக அரசு பொது மக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் 8 மண்டல போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக சுமார் 1 கோடியே 74 லட்சம் பயணிகள், தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் பேருந்து சேவையின் மூலம் பயன் பெற்று வருகின்றனர். மேலும், புதிய பேருந்துகள் மற்றும் வழித் தடங்களை துவக்கி வைத்தல், புதிய பணிமனைகள், அலுவலகக் கட்டடங்கள், கோட் டங்கள் கட்டுதல், போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் கருதி தரம் மேம்படுத்தப் பட்ட ஓய்வறைகள் கட்டுதல், இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு வசதி, பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்குதல், சென்னை மாநகரில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.
பெருகிவரும் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 235 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 118 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 18 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 60 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 16 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 25 பேருந்துகளும், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தலா 14 பேருந்துகளும், என மொத்தம் 154 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 500 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்வர் பழனிசாமி 7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.