சென்னை:
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மையத்தை தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் மற்றும் திருவள்ளூர் ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் ஜூன் 13 ஞாயிறன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.பின்னர் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. நாளொன்றுக்கு 400-க்கும் கீழ் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 13 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 4 அல்லது 5 கோடி பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. படுக்கை வசதியை பொறுத்தவரை தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 3 ஆயிரம் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 70 ஆயிரத்து 817 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு, அதில் ஆக்சிஜன் வசதி 72 சதவீதம் கூடுதலாகவும், சாதாரண படுக்கை வசதி 69 சதவீதம், ஐசியூ 44 சதவீதம் கூடுதலாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3-வது அலை பாதிப்பிலிருந்து விடுபட தற்போதுள்ள பழக்க வழக்கங்களான முகக்கவசம் அணிதல், சமூக பாதுகாப்பை கடைபிடித்தல் போன்றவற்றை மாற்றக் கூடாது. இரண்டாவது தவணை தடுப்பூசியை 84 நாட்களுக்குப் பிறகே போட்டுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.