சென்னை:
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியுள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 8,853 கன அடியாக உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 20,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
84 அடி உயரமுள்ள கபினி அணை நீர்மட்டம் 83.56 அடியாக உள்ள நிலையில் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1465 கன அடியாக உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. திறந்து விடப்பட்ட தண்ணீர் 2 நாட்களில் மேட்டூர் அணையை அடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 113 அடியாக உள்ள நிலையில் அணைக்கு வினாடிக்கு 6594 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 18 ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக பெரிய அணையான பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்ட இந்த அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.